துறையூரில் பேருந்துகளில் ஏர்ஹாரன்கள் தொல்லை துறையூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அருனின் அதிரடி ஆய்வில் பேருந்துகளுக்கு அபராதம்
துறையூர் டிச-17
திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் 16/12/2025 ந் தேதி மாலை 3மணி அளவில் துறையூர் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் அருண் தலைமையில் பேருந்துகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
துறையூர் பகுதிகளில் சிற்றுந்து மற்றும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் (ஏர் ஹாரன்) பயன்படுத்துவதாகவும் இதனால் கர்ப்பிணிகள், குழந்தைகள், வயதானவர்கள், இதய நோய் உள்ளவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவதாக பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்து வந்த நிலையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் அறிவுறுத்தலின் பேரில் முசிறி டிஎஸ்பி கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் துறையூர் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் அருண் தலைமையில் துறையூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் அப்துல்லா, போக்குவரத்து காவலர்கள் விக்னேஷ்,முனிஸ்வரன், ஸ்ரீதர், காஞ்சனா,கலைவாணி உள்ளிட்ட போலீசார் துறையூர் பேருந்து நிலையத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்ட பேருந்து மற்றும் சிற்றுந்துகளில் ஆய்வு செய்து சில பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்களை (ஏர்ஹாரன்) பறிமுதல் செய்து தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட ஏர் ஹாரன்களை அந்தந்த பேருந்து சக்கரத்திலேயே வைத்து நசுக்கி அழிக்கப்பட்டது.தொடர்ந்து போக்குவரத்து வாகன விதிகளை மீறும் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மோட்டார் வாகன ஆய்வாளர் அருண் தெரிவித்தார்.
அதே போல் பார்சல் ஏற்றி வரும் லாரிகள் நகரில் அனுமதிக்கப்பட்ட நேரங்களை தவிர்த்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் இதனால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள், அலுவலகம் செல்வோர்கள் ,ஆம்புலன்ஸ் வாகனங்கள் பாதிப்பு அடைவதாகவும், இதனை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்