கும்பகோணத்தில் தென்னக அயோத்தி என போற்றப்படும் இராமசாமி திருக்கோயிலில் இராமநவமி பெருவிழா முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கும்பகோணத்தில் தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் இராமசுவாமி திருக்கோயிலில் இராமபிரான் பட்டாபிஷேக கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு இராமபிரான் சீதா தேவியுடன் அமர்ந்திருக்க, சத்ருக்கனன் சாமரம் வீச, லட்சுமணன் தன்னுடைய மற்றும் அண்ணன் ராமனுடைய வில்லினையும் ஏந்தியிருக்க, பரதன் குடை சமர்ப்பிக்க வேறு எங்கும் காண முடியாத வகையில் அனுமன் ஒரு கையில் வீணையும், மறு கையில் இராமாயண சுவடியும் ஏந்தியபடி காட்சியளிக்கிறார்.

இத்தகைய சிறப்பு பெற்ற ஸ்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இராமநவமி பெருவிழா 10 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இவ்வாண்டும் இவ்விழா கடந்த 09ம் தேதி உற்சவர் ஸ்ரீஇராமபிரான், சீதாதேவி, லட்சுமணர் மற்றும் அனுமன் சமேதராய் தங்க கொடிமரம் அருகே எழுந்தருள கருடாழ்வார் உருவம் பொறிக்கபட்ட கொடி தங்க கொடிமரத்தில் ஏற்ற, கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் அனுமந்த வாகனம், இந்திர விமானம், சூரியபிரபை, சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் என பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக 9ம் நாளான இன்று 17ம் தேதி புதன்கிழமை இராமநவமியினை முன்னிட்டு ஸ்ரீராமபிரான், சீதாதேவி, லட்சுமணர் மற்றும் அனுமன் ஆகியோருடன் தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, மகா தீபாராதணை செய்யப்பட்டு, ராம ராம் சீதா ராம் கோஷம் விண்ணதிர தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. நாளை 10ம் நாள் 18ம் தேதி திருமஞ்சனம், புஷ்பயாகமும், 21ம் தேதி ராஜ உபசார திருமஞ்சனத்துடன் இவ்வாண்டிற்கான ராமநவமி பெருவிழா நிறைவு பெறுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *