பரமத்தி வேலூர்.
தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்கப்படாவிட்டால் தமிழகம் முழுவதும் விவசாயிகளை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் இளம் விவசாயிகள் மாநில சங்க தலைவர் சௌந்தர்ராஜன் எச்சரிக்கை.
நாமக்கல் மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் எந்த ஒரு கோரிக்கை மனுவையும் கண்டு கொள்ளவில்லை. பரமத்தி-வேலூர் அருகே, நஞ்சை இடையாற்றில் தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கையில் கருப்பு கொடி ஏந்தி, காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனை அடுத்து அனைத்து விவசாயிகள் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு. கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளை ஒன்று திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இளம் விவசாயிகள் மாநில சங்கத் தலைவர் சௌந்தரராஜன் பேட்டி
நாமக்கல் மாவட்டம் பரமத்தி-வேலூர் அருகே, தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இளம் விவசாயிகள் சங்கத்தின் சார்பில், விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி (1.11.2025) ஆர்ப்பாட்டம் நடத்த அறிவித்திருந்தனர்.
மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை, தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கருப்பு கொடியுடன் காவிரி ஆற்றில் இறங்குவதாக அறிவித்தனர்.
இதனை அடுத்து இன்று காலை, சிறப்பு அழைப்பாளர்களாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் ஆர். வேலுசாமி, விவசாயிகள் முன்னேற்ற கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் கா. பாலசுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்க, இளம் விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜெ. சௌந்தரராஜன் தலைமையில் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் நாமக்கல் மாவட்டம், பரமத்தி-வேலூர் காவிரி ஆற்றில் இறங்கி கையில் கருப்புக் கொடியுடன் ஏந்தி காவிரி ஆற்றில் இறங்குவதாக அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், அப்பகுதியில் நாமக்கல் மாவட்ட பரமத்தி காவல் ஆய்வாளர் இந்திராணி தலைமையில், காவல், வருவாய், தீயணைப்பு உள்ளிட்ட அரசு துறைகள் சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, விவசாயிகள் நூதன முறையில் காவிரி ஆற்றில் இறங்கி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் முயற்சியை தடுத்து நிறுத்த ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
இந்த நிலையில், இளம் விவசாயிகள் சங்கத்தினர், அறிவிக்கப்பட்ட இடத்திற்கு மாறாக, திடீரென நன்செய் இடையாறு என்ற பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் நடுப்பகுதியில், கையில் கருப்புக் கொடியுடன் கோரிக்கைகளை முழங்கியவாறு இறங்கினர். இதனால், காவல் துறையினர் காவிரி ஆற்றின் நடுப்பகுதிக்கு விரைந்து சென்று, காவிரி ஆற்றில் இறங்கி போராடிய விவசாயிகளை கரைப்பகுதிக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்கு மறுப்பு தெரிவித்து விவசாயிகள், ஆற்றின் நடுப்பகுதியில் கையில் கருப்பு கொடிகளை ஏந்தி தொடர்ந்து கோஷங்களை முழங்கி தங்கள் கோரிக்கைகளை வெளிப்படுத்தினர்.
இதனை எடுத்து காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் இருந்து விவசாயிகளை ஆற்றங்கரை பகுதிக்கு காவல்துறையினர் அழைத்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து கையில் கருப்பு கொடியுடன் நன்செய் இடையாறு காவிரி ஆற்றில் இறங்கி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 17 விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். பொத்தனூரில் உள்ள மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.
முன்னதாக, காவிரி ஆற்றின் நடுப் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய இளம் விவசாயிகள் சங்க தலைவர் ஜெ. சௌந்தர்ராஜன்,
நாமக்கல் மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு எவ்விதமான கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை என்பதால் அதன் செயல்பாடுகள் எங்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது. விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கும் மனுக்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. பொய்யரி வாய்க்கால் இதுவரை தூர்வாரப்படவில்லை. விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய விதை நிலக்கடலை வெளி சந்தைக்கு அரசு அதிகாரிகள் வழங்குகின்றனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ப. வேலூர் சந்தையில் முறைகேடாக சுங்கவரி வசூல் செய்வதை முறைப்படுத்த வேண்டும். இருட்டணை ஏரி இதுவரை தூர்வரப்படவில்லை.
விவசாய நிலங்களில் மின் மோட்டார் ஒயர்களை திருடி செல்வோர் மீது கைது நடவடிக்கை எடுக்கவில்லை.
கிராம குடியிருப்பு பகுதிகளை ஒட்டி விதிமுறைகளை மீறி அதிகாரிகள் துணையுடன் கோழிப்பண்ணை அமைப்பதை தடுக்க வேண்டும்.
என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை இதுவரை நிறைவேற்றவில்லை.
எனவே, இதுபோன்ற மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் அதிருப்தி தருவதால் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கையில் கருப்புக் கொடி ஏந்தி காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தை நடத்தினோம். மேலும் இதன்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் இளம் விவசாயிகள் சங்கத் தலைவர் ஜெ. சௌந்தர்ராஜன் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், இளம் விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.