தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
உப்பாறு அணையில் நீர் திறப்பு: அரசு உத்தரவின்படி 11 நாட்களுக்கு தண்ணீர் வெளியேற்றம்.
திருப்பூர் ஆட்சியர் நாரணவரே மனீஷ் ஷங்கர் ராவ் தலைமையில், அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகாவில் உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்த நிலையில், தமிழக அரசு இதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது
இதனைத் தொடர்ந்து, இன்று 03.01.2026 அன்று, திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் நாரணவரே மனீஷ் ஷங்கர் ராவ், இ.ஆ.ப. அவர்களின் தலைமையில், தமிழக அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் முன்னிலையில், உப்பாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடும் நிகழ்வு நடைபெற்றது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திலுள்ள உப்பாறு அணையிலிருந்து, வலது மற்றும் இடது கரை கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் பகுதிகளில் தற்போது உள்ள பயிர்களை பாதுகாக்கும் நோக்கத்துடனும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், 03.01.2026 முதல் 23.01.2026 வரை, தகுந்த இடைவெளிவிட்டு, மொத்தம் 11 நாட்களுக்கு, 173 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட) தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
இந்த நீர் வெளியீட்டின் மூலம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையம், கெத்தல்ரேவ், தொப்பம்பட்டி, நஞ்சியம்பாளையம், சூரியநல்லூர், கண்ணன் கோயில், மடத்துப்பாளையம், வரப்பாளையம், வடுகபாளையம் மற்றும் சின்னப்புத்தூர் ஆகிய கிராமங்களில் உள்ள 6060 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன.
அரசின் இந்த முடிவால், நீரின்றி பாதிக்கப்பட்டிருந்த பயிர்கள் பாதுகாக்கப்படும் என்பதோடு, விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அந்த அரசாணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈ. பிரகாஷ்,
தாராபுரம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.வி.செத்தில்குமார், குண்டடம் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், உப்பாறு பாசன தங்க தலைவர் கொங்கு ராஜேந்திரன், உப்பாறு பாசன வாய்க்கால் தலைவர் நாட்டு துறை உப்பாறு அணை உதவி பொறியாளர் விஜய சங்கர். மற்றும் திமுகவினர் விவசாயிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.