கடலூர் மாவட்டம் என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் இந்திய அரசுக்கு ₹360 கோடி இடைக்கால பங்கு ஈவுத் தொகை வழங்கப்பட்டது!
மத்திய அமைச்சரிடம் காசோலையை நேரில் வழங்கினார் என்எல்சிஐஎல் தலைவர்…
மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நவரத்னா பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம், 2025-26 நிதியாண்டிற்கான இடைக்காலப் பங்கு ஈவுத்தொகையாக (Interim Dividend) ₹360 கோடியை இந்திய அரசிடம் வழங்கியுள்ளது.
மாண்புமிகு மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு. ஜி.கிஷன் ரெட்டி , என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் பிரசன்ன குமார் மோட்டுபள்ளி, நேற்று இந்த இடைக்காலப் பங்கு ஈவுத்தொகைக்கான காசோலையை வழங்கினார். இந்திய அரசின் பங்குகளைக் கருத்தில்கொண்டு வழங்கப்பட்ட இக்காசோலை, நிலக்கரி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சனோஜ் குமார் ஜா முன்னிலையில் வழப்ங்கப்பட்டது.
மாண்புமிகு மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மேம்பட்ட நிதி மற்றும் செயல்பாட்டுத் திறனைப் பாராட்டியதுடன், நிறுவனத்தின் நீடித்த வளர்ச்சி மற்றும் சிறந்த செயல்பாடுகளையும் வெகுவாகப் பாராட்டினார்..
முன்னதாக, 12.01.2026 அன்று நடைபெற்ற என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுக் கூட்டத்தில், 2025-26 நிதியாண்டிற்கான இடைக்காலப் பங்கு ஈவுத்தொகையாக ஒவ்வொரு முதலீட்டுப் (ஈக்விட்டி) பங்கிற்கும் (முக மதிப்பு ₹10) ₹3.60 வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் அந்நிறுவனம் அறிவித்த மிக உயர்ந்த இடைக்காலப் பங்கு ஈவுத்தொகையாகும்; இது நிறுவனத்தின் வலுவான நிதித் திறன், செயல்பாட்டுத் திறன் மற்றும் நீடித்த வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.
இந்த பங்கு ஈவுத்தொகைக்கான அறிவிப்பு, இந்திய அரசின் மூலதன மறுசீரமைப்பு மற்றும் பங்காதாய வழிகாட்டுதல்களுக்கு இணங்க வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இது என்எல்சி இந்தியா நிறுவனத்தின் வலுவான அடிப்படை அம்சங்கள், விவேகமான நிதி மேலாண்மை மற்றும் தனது பங்குதாரர்களுக்குத் தொடர்ச்சியான மதிப்பை வழங்குவதில் உள்ள அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தப் பங்கு ஈவுத்தொகை, 2025-26 ஆம் ஆண்டிற்காக ‘முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை (DIPAM) அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தொகைக்கு இணக்கமாகவும் உள்ளது.
சுரங்கத் திறனை விரிவாக்குதல், அனல் மின் திறனை மேம்படுத்துதல் மற்றும் சூரிய சக்தி மற்றும் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரைவுபடுத்துதல் போன்ற
லட்சியமிகு மூலதனச் செலவுத் திட்டங்களை மேற்கொண்ட போதிலும், என்எல்சி இந்தியா நிறுவனம் தனது மீள்திறனையும் மேம்பட்ட லாபத்தையும் நிரூபித்துள்ளது. இந்தப் பங்கு ஈவுத்தொகை வழங்குதல் என்பது, வளர்ச்சி சார்ந்த முதலீடுகளுக்கும் பங்குதாரர்களுக்கான லாபத்திற்கும் இடையேயான ஆரோக்கியமான சமநிலையை வெளிப்படுத்துகிறது.
இந்தக் நிகழ்ச்சியில் பேசிய என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் திரு. பிரசன்ன குமார் மோட்டுபள்ளி, நிலையான வளர்ச்சி மற்றும் பங்குதாரர்களின் மதிப்பை உறுதி செய்யும் அதே வேளையில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதில் இந்நிறுவனம் உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், மேம்படுத்தப்பட்ட செயல்பாட்டு அளவீடுகள், செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் திட்டமிடப்பட்ட மூலதன ஒதுக்கீடு ஆகியவை நிறுவனத்தின் மேம்பட்ட நிதித் திறனுக்குப் பெரிதும் பங்களித்துள்ளன என்பதையும் அவர் வலியுறுத்திக் கூறினார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கம், சுரங்க நவீனமயமாக்கல் மற்றும் சிறந்த செயல்பாடுகள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி, என்எல்சி இந்தியா நிறுவனம் தனது உத்திசார்ந்த வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. இதன் மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதுடன், நீண்ட கால மதிப்பையும் உருவாக்கி வருகிறது.
என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தொடர்ச்சியான செயல்பாட்டுத் திறன் மேம்பாடு என்பது இந்திய அரசின் நிலக்கரி அமைச்சகம் வழங்கிய தொடர்ச்சியான, திட்டமிடப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் உறுதியான ஆதரவு ஆகியவற்றின் விளைவாகும். மாண்புமிகு பாரதப் பிரதமரின் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ (விக்சித் பாரத்) மற்றும் ‘சுயசார்பு எரிசக்தி இந்தியா’ ஆகிய கனவுத் திட்டங்களுக்குப் பங்களிப்பதில் என்எல்சிஐஎல் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. அதோடு, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, தேசத்திற்கும் தனது பங்குதாரர்களுக்கும் நீண்டகால மதிப்பை உருவாக்கி வருகிறது.