தாராபுரம் செய்திகள் பிரபு
செல்:9715328420
150 ஆண்டுகளாக தொடரும் பொன்னூஞ்சல் பாரம்பரியம்.
தாராபுரத்தில் தலை பெண் குழந்தைகளுக்கு முதல் மரியாதை
மேளதாளங்கள் முழங்க தாய்மாமன்கள் தோளில் சுமந்த ஆன்மிக விழா
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சங்கரண்டாம்பாளையம் கிராமத்தில், கொங்கு தமிழர்களின் பாரம்பரியமும், பெண் குழந்தைகளின் தெய்வீக தன்மையையும் போற்றும் வகையிலும், 150 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வரும் பொன்னூஞ்சல் திருவிழா, மரபு மாறாமல் கோலாகலமாக நடைபெற்றது.
பண்டைய கொங்கு 26 நாடுகளின் தலைமையிடமாக விளங்கிய சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர் அரண்மனையில், மார்கழி மாதம் திருவாதிரையை முன்னிட்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த பொன்னூஞ்சல் திருவிழா, இன்று காலை 11 மணிக்கு தொடங்கி, இரவு 8 மணி வரை பாரம்பரிய முறையில் நடந்தது.
இந்த விழாவில் கொங்கு வேளாளர் பெரியகுலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் 160-க்கும் மேற்பட்ட தலை பெண் குழந்தைகள், அவர்களது உறவினர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பெரியநாயகி அம்மன் உட்பட ஏழு கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன. குடும்பத்தில் முதலாவதாக பிறந்த பெண் குழந்தைகளுக்கு பட்டாடைகள், அணிகலன்கள் அணிவிக்கப்பட்டு, விநாயகர் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர்
அங்கு 16 வகையான சீர்வரிசைகளுடன் காத்திருந்த 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் நெற்றியில், தாய்மாமன்கள் தங்கப் பட்டம் கட்டி, தங்களது தோளில் அமர வைத்து, மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்தனர். பின்னர் தங்கத் தகடுகளால் வேயப்பட்ட பொன்னூஞ்சலில் குழந்தைகள் அமர வைக்கப்பட்டனர்.
உறவினர்கள் வெண்சாமரம் வீச, பெரியநாயகி அம்மனாகவே பெண் குழந்தைகளை பாவித்து, ஊஞ்சலில் ஆட வைத்த காட்சி, பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
பொன்னூஞ்சல் விழாவின் வரலாற்றுப் பின்னணி குறித்து விழா ஒருங்கிணைப்பாளர் நரேந்திரன் தெரிவிக்கையில்:-
சோழ நாட்டை ஆண்ட கரிகால சோழனின் மைத்துனரே இரும்பிடர்த் தலையார். அவரின் வழித்தோன்றலே கொங்கு வேளாளர் பெரியகுல வேணாடர் வம்சமாகும். கரிகால சோழனின் மகளான ஆதிமந்தையை, சேர நாட்டை ஆண்ட ஆட்டன் அத்தி என்பவருக்கு மணமுடித்து கொடுத்தவர் இரும்பிடர்த் தலையார்
சேர அரசனுக்கு எதிராக நடந்த போரில், இரும்பிடர்த் தலையார் தலைமையில் போரிட்டு, நாட்டை சூழ்ச்சிகளில் இருந்து காப்பாற்றியதாக வரலாறு கூறுகிறது. இதனால் மகிழ்ந்த சேர அரசன் ஆட்டன் அத்தி, வேளிர் நாட்டை ஆளும் உரிமையை இரும்பிடர்த் தலையாருக்கு வழங்கினார்.
மேலும், அவரது பரம்பரையில் முதல் வீட்டிற்கு “வேணாடர்” என்ற பட்டப்பெயரும், அந்த வம்சத்தில் பிறக்கும் முதல் பெண் குழந்தைகளுக்கு, ஆதிமந்தை ஆடிய பொன்னூஞ்சலை வழங்கும் உரிமையும் அளிக்கப்பட்டது. அந்தப் பொன்னூஞ்சலை கரிகால சோழன் பரிசாக அளித்ததாக வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்த நாள் முதல், கொங்கு வேளாளர் பெரியகுலத்தின் முதல் வீடான சங்கரண்டாம்பாளையம் வேணாடர் அரண்மனையில், மார்கழி மாதம் திருவாதிரை நாளில், தலை பெண் குழந்தைகளுக்கு முதல் மரியாதை வழங்கும் வகையில், இந்த பொன்னூஞ்சல் திருவிழா நடைபெற்று வருகிறது.
தலை பெண் குழந்தைகளுக்கு முதல் மரியாதை
தாய்மாமனின் தலைசிறந்த உறவையும், குடும்பத்தின் அடையாளமாக விளங்கும் தலை பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தையும், தெய்வீக தன்மையுடன் போற்றும் இந்த விழா, கொங்கு தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், உறவுமுறை பெருமைகளை இன்றும் உயிர்ப்புடன் எடுத்துச் செல்கிறது.
150 ஆண்டுகளுக்கு மேலாக தலைமுறை தலைமுறையாக தொடரும் இந்த பொன்னூஞ்சல் திருவிழா, பெண் குழந்தைகள் சமுதாயத்தின் பெருமை என்ற செய்தியை உறுதியாக சொல்லும் பாரம்பரிய நிகழ்வாக விளங்குகிறது.