குடவாசல் கல்லூரி இடப் பிரச்சினைச் சம்பந்தமாக மாணவர்கள், பொதுமக்களை இணைத்துப் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுமெனத் தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

குடவாசல் கல்லூரி இடப் பிரச்சினைச் சம்பந்தமாக தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும் நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான காமராஜ் நன்னிலத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;

சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனது கோரிக்கையை ஏற்று, 2017 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குடவாசலுக்குக் கல்லூரியை வழங்கினார். குடவாசல் மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த ஏழை, நடுத்தரப் பகுதி மாணவர்களுக்காகக் கொண்டுவரப்பட்ட கல்லூரி. இக்கல்லூரி குடவாசல் பகுதியிலேயேத் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதுதான் அப்பகுதி பொதுமக்கள், மாணவர்கள் அனைவரின் கருத்தாகும். மாறாகத் தவறான தகவல்களைச் சொல்லி குடவாசல் தொகுதியை விட்டு கல்லூரியை வெளியில் கொண்டு செல்வதற்கு முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இது ஒரு தவறான முன்னுதாரணம். அதிமுக ஆட்சியில் கல்லூரிக்குப் புதிய கட்டிடம் கட்டுவற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் நீதிமன்ற வழக்கின் காரணமாக கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. குடவாசல் பகுதியில் இடம் கொடுப்பதற்கு பல நிலச் சொந்தகாரர்கள் முன் வந்திருக்கிறார்கள். குடவாசல் பகுதியிலேயேக் கல்லூரி கட்டுவதற்கானப் போதிய இடம் உள்ளது. குடவாசல் பகுதியிலேயேக் கல்லூரி செயல்பட வேண்டும் என்பதுதான் மாணவர்கள், பொதுமக்கள் அனைவரது விருப்பம்.
அப்பகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நானும் அதை வலியுறுத்திக் கூற கடமைப்பட்டுள்ளேன். இது தொடர்பாகச் சட்டமன்றத்திலும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. குடவாசல் பகுதியை விட்டு கல்லூரியை வேறு இடத்திற்கு மாற்றும் முடிவு செயல்படுத்தப்பட்டால், மாணவர்கள், பொதுமக்களுடன் இணைந்து, தலைமையேற்று நானே போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தேர்வுக்குத் தயாராக வேண்டிய நிலையில், தற்போது குடவாசல் கல்லூரி மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். உடனடியாக அரசு அதிகாரிகள், குடவாசல் பகுதியிலேயேக் கல்லூரிக்கானக் கட்டிடம் கட்டப்படுமென எழுத்துப்பூர்வமாக உறுதியளித்து, மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுத் மாணவர்கள் தேர்வுக்குத் தயாரக வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிட வேண்டுமெனத் தெரிவித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *