திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் நீலத்தி விளையாட்டு கழகம் மற்றும் ஆர் ஆர் பள்ளி இணைந்து போதை விழிப்புணர்வு மற்றும் ஜங்க் ஃபுட்டுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாரத்தான் விளையாட்டு போட்டி நடைபெற்றது .
இந்த மாரத்தானில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். 5 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்ற இந்த மாரத்தானில் 300-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் போதை பொருள் மற்றும் துரித உணவுகளால் ஏற்படும் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓடினார்கள்.
மாரத்தானில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாரத்தான் விளையாட்டுப் போட்டி ஒருங்கிணைப்பாளர் விஜய் கூறியதாவது… தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்த நிலையில், ஏற்கனவே விளையாட்டு மைதானங்கள் உள்ள பகுதியில் மட்டுமே தற்போது விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
வலங்கைமான், நீடாமங்கலம் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் விளையாட்டு மைதானங்கள் ஒன்று கூட இல்லை. இருந்தபோதிலும் விளையாட்டுகளில் ஆர்வமாக உள்ள கிராமப்புற விவசாய தொழிலாளர்களின் பிள்ளைகள் விளையாட்டு மைதானங்கள் இல்லாத காரணத்தினால், சாலைகளில் ஓடி பயிற்சி எடுத்து மாநில மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி வாகை சூடி வருகின்றனர். தற்போது வரை இந்த பகுதிகளை சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பணியில் உள்ளனர்.
இந்தப் பகுதியில் 200 மீட்டர் ட்ராக் அமைத்து கொடுத்தால் ஒலிம்பிக்கில் மெடல் பெறவில்லை என்ற நிலையை மாற்றி பல்வேறு பதக்கங்களை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்ப்போம். “வேலை பார்ப்பதற்கு நாங்கள் தயார் – விளையாட்டு மைதானம் அமைத்துக் கொடுப்பதற்கு அரசு தயாராக இருந்தால் நிச்சயமாக ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்ப்போம். எனவே உடனடியாக தமிழக முதல்வர் தலையிட்டு விளையாட்டு மைதானம் அமைத்து தர முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார்