தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகள் — பிரியாணி கடையிலும் ‘சிக்கன் பீஸ்’ பறிப்பு! பொதுமக்கள் அச்சம், வனத்துறையிடம் கடும் கோரிக்கை!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில், சமீபகாலமாக குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து, பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. தாராபுரம் பொள்ளாச்சி சாலை, பேருந்து நிலையம், சிஎஸ்ஐ பள்ளி வளாகம், தாராபுரம் காவல் நிலையம், முருகன் கோவில் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குரங்குகள் கூட்டமாக சுற்றித் திரிவதாக பொதுமக்களும் தன்னார்வலர்களும் தெரிவித்துள்ளனர்.

சுமார் ஆறு குரங்குகள் தொடர்ந்து நகரத்தின் பல பகுதிகளில் உலாவி வருவதால், மக்கள் திடீர் பயத்தில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக, தாராபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு பிரியாணி கடைக்குள் புகுந்த குரங்கு, வாடிக்கையாளர் ஒருவரின் பிளேட்டிலிருந்த சிக்கன் பீஸை பறித்துக்கொண்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதோடு, பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப்புற கடைகளில் முன் பகுதியில் தொங்கவிடப்பட்டிருந்த வாழைப்பழம், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை குரங்குகள் பறித்துச் செல்வதும், பாதசாரிகளின் கைகளில் உள்ள பைகளையும் துரத்தி பிடிக்க முயல்வதும் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் தெரிவித்ததாவது:
“தாராபுரம் முழுவதும் குரங்குகள் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மலை சார்ந்த பகுதிகள் மற்றும் வனப்பகுதிகள் இல்லை அப்படி இருக்கும் பட்சத்தில் குரங்குகள் தாராபுரத்திற்குள் நுழைந்துள்ளது அந்த குரங்குகள் வீடுகள், கடைகள், பள்ளிகள் அருகிலும் அவை சுற்றி வருகின்றன. மக்கள் அமைதியாகச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு உடனடியாக திருப்பூர் மாவட்ட காங்கேயம் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, குரங்குகளை பாதுகாப்பாகப் பிடித்து காடுகளுக்குள் விட ஏற்பாடு செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதேநேரத்தில், பொதுமக்கள் அரசையும் வனத்துறையையும் கடுமையாகக் கோரியுள்ளனர்:
“நகரின் பாதுகாப்பிற்காக வனத்துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும். குரங்குகளால் பள்ளி மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் போன்றோர் அச்சத்தில் உள்ளனர். இதற்கு உடனடி தீர்வு அளிக்காவிட்டால், பெரிய விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது” என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தாராபுரம் பகுதியில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால், வனத்துறை அதிகாரிகள் அவசரமாக நடவடிக்கை எடுத்து, பொதுமக்கள் நிம்மதியாக வாழும் சூழலை உருவாக்க வேண்டும் என சமூக அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *