ஏபி. பிரபாகரன் செய்தியாளர் பெரம்பலூர்

பெரம்பலூர் தமிழகத்தில் வேலை வாய்ப்பினை உருவாக்கும் நோக்கத்தின் அடிப்படையிலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் திட்டம் தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசாணை எண். 80, நாள் 30.07.2010ன் படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.5 லட்சம் வரையில் உள்ள கடன் திட்டங்களுக்கு வங்கியின் மூலம் கடன் பெற மாவட்ட தொழில் மைய பொது மேலாளரைத் தலைவராகக் கொண்ட தேர்வுக்குழு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யும். திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் மானியமாக ரூபாய் 1,25,000/- வரை தமிழக அரசு வழங்கும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவினர் 18 முதல் 35 வயது வரையிலும், சிறப்பு பிரிவினர் மற்றும் பெண்கள் 18 முதல் 45 வயது வரையிலும் இருக்கலாம் மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 5,00,000/- வரை இருக்கலாம். திட்ட மதிப்பீட்டில் பொது பிரிவினர் 10 சதவீதமும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் இராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர், மகளிர் மற்றும் திருநங்கைகள் 5 சதவீதமும் தமது பங்காக செலுத்த வேண்டும்.

மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு 89255 33976, 89255 33977 என்ற தொலைபேசியிலோ அல்லது பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில், பெரம்பலுார் 621 212 அலுவலகத்தை நேரிலோ அணுகலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *