தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடம் திறப்பு: காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தாராபுரத்தில் ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தாராபுரம் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
தாராபுரத்தில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன், 1582 சதுர மீட்டர் பரப்பளவில் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் அறை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறை, கூட்ட அரங்கு, பொறியாளர்கள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவு அறைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப் புதிய கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, இந்தப் புதிய கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்து, அலுவலகப் பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.சங்கமித்திரை, திருப்பூர் மாநகராட்சி 4 ஆம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன், தாராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியம், விஜயன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.