காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
ஆண்டவன் உத்தரவு: சிவன்மலை முருகன் கோயிலில் மஞ்சள் பிள்ளையார் வைத்து பூஜை.
காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக்கோயிலில் செவ்வாய்க்கிழமை மஞ்சளால் செய்யப்பட்ட பிள்ளையார் வைத்து, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலை ஊராட்சியில், புகழ்பெற்ற சிவன்மலை முருகன் மலைக் கோயில் உள்ளது. மற்ற எந்தக் கோயில்களிலும் இல்லாத வகையில், இந்தக் கோயிலில் ஆண்டவன் உத்தரவு என்ற சிறப்பு அம்சம் உள்ளது. அதாவது, சிவன்மலை முருகன் ஒரு பக்தரின் கனவில் வந்து, இன்ன பொருளை வைத்து பூஜை செய்ய உத்தரவிட்டதாகக் கூறி, பக்தர்கள் கொண்டு சிறப்பு பூஜைப் பொருளை வைத்து இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
பின்னர் மூலவர் அறைக்கு முன்பாக உள்ள கண்ணாடிப் பெட்டியில், சிறப்பு பூஜைப் பொருள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்படும். இதுவே ஆண்டவன் உத்தரவு என அழைக்கப்படுகிறது.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே கொங்கூர் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்ற பக்தரின் கனவில் வந்ததாக, செவ்வாய்க்கிழமை மஞ்சள் பிள்ளையார், அருகம்புல், வெற்றிலை பாக்கு, எலுமிச்சம்பழம் ஆகியன வைத்துப் பூஜை செய்யப்பட்டு, பின்னர் மேற்கண்ட பொருள்கள் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டது.
இதற்கு முன், கடந்த வருடம் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி முதல் திங்கள்கிழமை வரை கண்ணாடிப் பெட்டிக்குள் மண் கலயத்தில் கடல் நீர் வைக்கப்பட்டிருந்தது.
இன்னொரு பக்தரின் கனவில், அடுத்த பூஜைப் பொருள் வரும் வரையில், கண்ணாடிப் பெட்டிக்குள் மஞ்சள் பிள்ளையார் உள்ளிட்ட பொருள்கள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.