பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி கடந்த 2011-ம் ஆண்டு தமிழகத்தில் ரத யாத்திரை மேற்கொண்டார். பல்வேறு மாவட்டங்களில் பயணம் செய்தார். அப்போது ரத யாத்திரை மதுரை மாவட்டம் திருமங்கலம் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் செல்வதாக இருந்தது. அந்த நேரத்தில் அத்வானியை கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் ஆலம்பட்டி தரைப்பாலத்தில் பைப் வெடிகுண்டு வைத்திருந்தனர்.

உடனடியாக அதனை போலீசார் கண்டுபிடித்து செயல் இழக்க வைத்து அகற்றினர். இதனால் அத்வானி மயிரிழையில் உயிர் தப்பினார். வெடிகுண்டு வைத்த வழக்கில் மதுரை நெல்பேட்டையை சேர்ந்த இஸ்மத், அப்துல்லா, நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறையை சேர்ந்த அபுபக்கர்சித்திக் ( 57) உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் அபுபக்கர் சித்திக் தவிர மற்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஏற்கனவே ஒருவர் இறந்து விட்டார். இந்த நிலையில் கடந்த 12 ஆண்டுகளாக அபுபக்கர் சித்திக் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் அவரை பிடித்து உடனடியாக ஆஜர்படுத்த வேண்டும் என்று திருவள்ளூர் பூவிருந்தவல்லி சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து இன்று சென்னை, மதுரை சிறப்பு குற்ற புலனாய்வுத்துறை போலீசார் தோப்புத்துறையில் உள்ள அபுபக்கர் சித்திக் வீட்டிற்கு வந்தனர். அங்கு அவரது வீட்டில் தேடப்படும் குற்றவாளி அபுபக்கர் சித்திக் என்று அச்சிடப்பட்டு அவரது படத்துடன் நோட்டீஸ் ஓட்டினர். தொடர்ந்து அவரை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *