அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.29 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் மருத்துவமனைக் கட்டடப் பணிகளுக்கு மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் பொதுப்பணித் துறையின் சார்பில் கட்டப்படவுள்ள கூடுதல் மருத்துவமனைக் கட்டடக் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி அவர்கள் தலைமையில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் ஏழு திட்டங்களின் கீழ் புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, பணி ஆணைகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி ரூ.1136 கோடி மதிப்பீட்டில் 44 பல்வேறு மருத்துவமனை கட்டங்களுக்கு காணொலிக்காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி விழா பேரூரையாற்றினார்.

அதனைத்தொடர்ந்து, அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில் ரூ.29 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்படவுள்ள கூடுதல் மருத்துவமனைக் கட்டடக் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் இன்றைய தினம் அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்தார்.

புதியதாக கட்டப்படவுள்ள கூடுதல் மருத்துவமனைக் கட்டடம் 06 தளங்களைக் கொண்டதாகும். இதில் ஆண், பெண் தனித்தனி சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கம், அவசர சிகிச்சை பிரிவு, சித்தா பிரிவு, புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்படவுள்ளது. கட்டுமானப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மணிவண்ணன், தலைமை மருத்துவ அலுவலர் மரு.உஷா, நகர்மன்றத் தலைவர் சுமதி சிவக்குமார், நகர்மன்றத் துணைத் தலைவர் கருணாநிதி, நகர்மன்ற உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *