கோவை
கோவையில் அகரம் கிட்ஸ் மோண்டேசரி பள்ளியில் மழலை குழந்தைகள் கணிதத்தில் அபார திறனை வெளிப்படுத்தி உலக சாதனை படைத்துள்ளனர்.
கோவை வெள்ளலூர் பகுதியில் ‘யங் மேத் லெஜெண்ட்ஸ் – கூட்டல் சாம்பியன்ஷிப்’ (Young Math Legends – Addition Championship) என்ற உலக சாதனை முயற்சி நடைபெற்றது.
அகரம் கிட்ஸ் மோண்டேசரி பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 6 வயதுக்கு உட்பட்ட 8 மழலை மாணவர்கள் இணைந்து 20 நிமிடங்களில் மொத்தம் 1376 கூட்டல் கணக்குகளுக்கு துல்லியமாக விடை கண்டனர். குறுகிய நேரத்தில் அதிகளவு கணக்குகளை மின்னல் வேகத்தில் சரியாக செய்து முடித்த இவர்களின் திறமை அனைவரையும் வியக்க வைத்தது.
இந்த சாதனை ‘சோழன் உலக சாதனைப் புத்தகத்தில்’ பதிவு செய்யப்பட்டு, மாணவர்கள் உலக சாதனையாளர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். நிகழ்வை நேரடியாக கண்காணித்த சோழன் உலக சாதனைப் புத்தகத்தின் பிரதிநிதிகள், மாணவர்களின் வேகத்தையும் துல்லியத்தையும் உறுதிப்படுத்திய பின்னர் சாதனையை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
பின்னர் சாதனை படைத்த 8 மாணவர்களுக்கும் பதக்கங்களும் உலக சாதனைச் சான்றிதழ்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் நிறுவனர் பொற்கொடி செல்வராஜ், தாளாளர் செல்வராஜ்,செயலாளர் அகரமுதல்வன், தலைமை அலுவலர் கல்பனா ஸ்ரீகாந்த் , சோழன் உலக சாதனைப் புத்தகத்தின் கோவை மண்டல செயலாளர் திலகவதி, மாவட்ட தலைவர் பாலமுரளி கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர்.