தமிழ்ப் பல்கலைக்கழகம், இலக்கியத்துறை சார்பாக கார் பெயல் என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நூல் வெளியிட்டு நிகழ்ச்சி மொழிப்புல அவையத்தில் திங்கட்கிழமை நடைப்பெற்றது.

. இந்நிகழ்ச்சியில் முனைவர்ப் பட்ட ஆய்வாளர்களின் புதன்வட்டக் கருத்தரங்கக் கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப்பெற்று நூலாக்கம் செய்து “கார் பெயல்” என்னும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு வழி நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. துணைவேந்தர் (பொ) குழு உறுப்பினர் பேராசிரியர் முனைவர் பெ.பாரதஜோதி இச்சிறப்புச் சொற்பொழிவு சிறக்க தங்களின் வாழ்த்தினைத் தெரிவித்தார். பதிவாளர் (பொ), .கோ.பன்னீர்செல்வம் வாழ்த்துரை ஆற்றினார்.

ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், முனைவர் ஜெ.தேவி , கம்பனின் பெருமைகளையும் கவிதைகளையும் போற்றி, சிறப்பு விருந்தினர் அவர்களையும் அறிமுகம் செய்து பேராசிரியர்கள், பிறத்துறை பேராசிரியர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து திருச்சிராப்பள்ளி,தமிழாய்வுத்துறை, உருமு தனலெட்சுமி கல்லூரி,தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் முனைவர் ந.விஜயசுந்தரி பங்கேற்று பேசியதாவது: தமிழ்ப் பல்கலைக்கழகத்தினை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தொடர் நிகழ்வுகளின் வாயிலாக சிறக்கின்றனர் என்று புகழ்ந்து “கம்பனைப் பேசியோர்…”என்ற பொருண்மையில் கம்பனின் பாடல்வழி கருத்துக்களையும் வரிகளையும் மாணவர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் விளக்கிக்கூறி தனது உரையை தொடங்கினார்

அப்போது அறிவு நோக்குடன் இலக்கியத்தில் கம்பனைப் பாடாத இடமே இல்லை. மாணவர்கள் தமிழ் அறிவை பெறுவதோடு ஆங்கில அறிவும் கணிப்பொறி அறிவும் பெற வேண்டும் அவ்வாறு பெற்றால் மட்டுமே இனிவரும் காலங்களில் வேலைக்குச் செல்லும் நிர்பந்தத்தில் வாழ்வு சிறக்கும் என்று கூறினார்.

கம்பராமாயணத்திற்கு எண்ணற்ற பல உரைகள் வெளிவந்துள்ளன…. அவ்வகையில் பதவுரை, பொழிப்புரை, காண்டிகையுரை போன்ற பல வடிவ உரைகளை சென்னைக் கம்பன் கழகம் வெளியிட்டது. இலக்கிய வரலாறு வேறு இலக்கியத்தின் வரலாறு வேறு என்பதை மாணவர்கள் நன்கு உணர்ந்து புரிந்து படிக்க வேண்டும். தமிழ்ச் சிறப்பு பெறுவது தொன்மையால் அல்ல… அதன் தொடர்ச்சியால் எனவே, மாணவர்கள் தமிழ் இலக்கியத்தின் வரலாற்றினை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்த்திட வேண்டும்.

கம்பராமாயணம் நூல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தாயார் சன்னதிக்கு நேர் எதிரே உள்ள ஒரு நாலுகால் மண்டபத்தில் அரங்கேற்றப்பட்டது. அப்படிப்பட்ட நூலில் மெல்லின எழுத்துக்கள் மட்டுமே பயின்று வரும் பஞ்சியொளிர்…. எனத் தொடங்கும் பாடற்சிறப்பு இன்றளவும் உயர்வாகப் பேசவைக்கிறது.

ராமன் வாலியைக் கொன்றாலும்… மறைந்து நின்று அம்பு எய்தான் என்கிற பேச்சு வாழைப் பழத்தினுள் நுழைந்த ஊசிபோல் மனம் வருந்துகிறது என்றான். எல்லோரும் படைப்பினை மட்டும் உருவாக்கினார்கள். ஆனால், கம்பன் மானுடத்தைப் பேசினான் அதனால்தான் படிக்காத பாமர மக்கள் மனதிலும் நிலைத்து நின்று வாழ்கிறான்.

அம்பு விழியென்று… ஏன் சொன்னான்? அது அம்பு பாய்வதினாலே… என்னும் பாடலில் கவியரசர் கண்ணதாசன் கம்பன் ஏமாந்தான் என்று பாடுகிறார். அணுவைத் துளைப்பது பற்றி 12ம் நூற்றாண்டிலே முதன் முதலாகப் பதிவு செய்தவர் கம்பர். கடவுளே இல்லையென்று சொன்ன திராவிட இயக்கத்தாரையும் கூட கடவுள் இருக்கிறார் என்று சொன்ன கம்பரசத்தை நாளும் இசைக்கும் கம்பன் கழகத் தொடக்க விழாவிற்கு குத்துவிளக்கேற்றி கம்பனைப் பேச வைத்தது.
தமிழ்ப் புலவன் என்றாலே… யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் என்றும் தமிழ்நாடு என்றாலே கம்பர் பிறந்த தமிழ்நாடு என்றும் கம்பரால் தமிழும் தமிழ்நாடும் முதன்மைபெறுகிறது. தமிழைப் பற்றுக என்று இனிய குரலின் மூலம் பக்தியுடன் கம்பனைப் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.அதனைத் தொடர்ந்து முனைவர் பட்ட ஆய்வாளர்களின் “கார் பெயல்” என்னும் கட்டுரைத் தொகுப்பு நூல் பதிவாளர் முன்னிலையில் வெளியிடப்பட்டு சிறப்பு விருந்தினரவர்கள் நூலினைப் பெற்றுக்கொண்டார். நிறைவில் இலக்கியத்துறையின் உதவிப்பேராசிரியர், முனைவர் இரா.தனலெட்சுமி நன்றி கூறினார். இலக்கியத்துறையின் முதுகலை இரண்டாமாண்டு மாணவர்கள் செல்வன் மோ.கோகுல்சங்கர், செல்வி ஐ.கீதாஞ்சலி ஆகியோர் இணைப்புரை வழங்கினார்கள். இதில் இலக்கியத்துறைப் பேராசிரியர்கள், பிற துறைப்பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் அலுவல்நிலைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *