தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம் சார்பில், கோவை மாவட்ட சதுரங்க சங்கம் ஏற்பாடு செய்த 36வது முதல் 40வது வரையிலான தமிழ்நாடு சர்வதேச மாஸ்டர்ஸ் நார்ம் குளோஸ்ட் சர்க்யூட் சதுரங்க (செஸ்) போட்டிகள் 2025-26, கோவையில் உள்ள ஹோட்டல் அலங்கார் கிராண்டில் வெள்ளிக்கிழமை (14.11.25) தொடங்கியது. இந்த ஐந்து போட்டிகளும் டிசம்பர் 22, 2025 வரை நடைபெற உள்ளன.

இது பற்றிய செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அப்போது பேட்டியளித்த சக்தி குழுமத்தின் தலைவரும், தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கத்தின் தலைவருமான எம். மாணிக்கம் கூறுகையில்:

செஸ் ஒலிம்பியாட் நிகழ்வு தமிழகத்தில் நடைபெற்ற போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் 100 கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்க வேண்டும் என்று விரும்பியதன் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம் இந்த சர்வதேச மாஸ்டர்ஸ் நார்ம் போட்டிகளை நடத்தி வருகிறது.

சர்வதேச மாஸ்டர் ஆவதற்கு 2400 புள்ளிகள் மற்றும் 3 நார்ம்கள் (தகுதி) தேவை. இந்த நார்ம்களைப் பெறுவதற்கான வாய்ப்பை தமிழகத்தை சேர்ந்த சிறந்த வீரரகள் உள்நாட்டிலேயே பெற வசதியாக, அவர்கள் மிக குறைந்த செலவில் இந்த போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளோம்.

இதற்காக முன்னணி சர்வதேச வீரர்களை தமிழகத்திற்குக் கொண்டு வந்து நமது வீரர்களுடன் போட்டியிட வைத்து வருகிறோம். இதற்கான செலவுகளைச் சங்கம் ஏற்பதன் மூலம், உள்ளூர் வீரர்கள் மிகவும் குறைவான கட்டணத்தில் (உதாரணத்திற்கு ரூ.3 லட்சம் செலவாகும் இடத்தில் ரூ.10,000 மட்டும்) உலகத் தர நிகழ்வுகளில் போட்டியிட முடிகிறது.

இதுவரை 35 போட்டிகள் நடத்தப்பட்டு, அதன் மூலம் 22 ‘சர்வதேச மாஸ்டர் நார்ம்கள்’ பெறப்பட்டுள்ளன. தற்போது தமிழகத்தில் 45 சர்வதேச மாஸ்டர்கள் உள்ளனர். அடுத்த 4-5 ஆண்டுகளில் 100 சர்வதேச மாஸ்டர்கள் என்ற இலக்கை எட்ட முடியும்.

இவ்வாறு அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சக்தி குழுமம் கோவையில் நடக்கும் இந்த ஐந்து போட்டிகளுக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டுள்ளது. சமீபத்தில் கோவையைச் சேர்ந்த ஆகாஷ், ஸ்ரீ ஹரி, ஹர்ஷத் உள்ளிட்ட வீரர்கள் இந்தப் போட்டிகள் மூலம் சர்வதேச நார்ம்களைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கத்தின் பொருளாளர்ஆர். சீனிவாசன்; துணைத் தலைவர் ஆர். அனந்தராம்;
சர்வதேச செஸ் கூட்டமைப்பின் முன்னாள் துணைத் தலைவர் சுந்தர் மற்றும் தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்டீபன் பாலசாமி ஆகியோர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *