கடலூர் மாவட்டம் விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி, பண்ருட்டி, கடலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் பதிவேற்றம் செய்யும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்
கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி, பண்ருட்டி, கடலூர் ஆகிய வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மூலம் தேர்தல் ஆணைய இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்,
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 04.11.2025 அன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளாக 2,313 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டு வருகிறது.
வாக்காளர்களுக்கு வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாக சென்று வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை திரும்ப பெற்று அதனை தேர்தல் ஆணைய இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் பெறப்பட்ட படிவங்களை அவர்களே நேரடியாக இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணியினை மேற்கொண்டு வருகிறார்கள். இப்பணியினை எளிதாக செய்யும் வகையில் கூடுதலாக ஊரக வளர்ச்சித் துறை, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
இதன் மூலம் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களின் பணி எளிதாக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் படிவத்தினை பூர்த்தி செய்திடும் போது அவர்களுக்கு எழும் ஐயங்களை உடனிருந்து சரியாக பூர்த்தி செய்திட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. இப்பணியினை சரியான கால அளவில் நிறைவு செய்திடும் வகையில் துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் இதுகுறித்து சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட படிவங்களின் எண்ணிக்கை, வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்து பெறப்பட்ட படிவங்கள், இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட படிவங்கள் எண்ணிக்கை, வாக்காளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைப் படிவங்கள் குறித்து தினந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து தேர்தல் அலுவலர்களும் இப்பணியின் முக்கியத்துவம் குறித்து அறிந்து மிக கவனமுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், பொது (பொ.) சண்முகவள்ளி, விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, கடலூர் வருவாய் கோட்டாட்சியர் சுந்தரராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கமலம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.