C K RAJAN
Cuddalore District Reporter
9488471235..
கடலூர் மாவட்டம்..சம்பா நெல் சாகுபடியை சிறப்பாக மேற்கொள்ள தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார்
தெரிவித்துள்ளார்..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மேட்டூர் அணை 2026 செப்டம்பர் 1 ஆம் தேதி சம்பா சாகுபடிக்காக 45 நாட்களுக்கு திறந்து விடப்பட்ட நிலையில், கடலூர் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடியை சிறப்பாக மேற்கொள்ள தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2026–27 ஆம் ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் 2,16,500 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பாசன நீர் நிலையை கருத்தில் கொண்டு, விவசாயிகள் அதிக பரப்பளவில் நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ள வேண்டும்.
மேலும், நீர் பயன்பாட்டை சிக்கனமாக்கும் வகையில் ஆடுதுறை 54, ஆடுதுறை 58, டிபிஎஸ் 5, கோ 52, கோ 55, கோ 56, கோ 58, CR1009 sub1, பிபிடி5204, திருச்சி 3, ஏஎஸ்டி 21,
கோ 50, மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி, திருச்சி 5 மற்றும் டிகேஎம் -13 போன்ற மத்திய கால நெல் இரகங்களை செப்டம்பர் மாத இறுதிக்குள் விதைக்க அறிவுறுத்தப்படுகிறது. நீண்டகால நெல் இரகங்கள் சாகுபடி செய்யப்படின் பிப்ரவரி இறுதியில் கூடுதல் நீர் தேவை ஏற்பட்டு பயிர்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதால், அவற்றை செப்டம்பர் மாதத்தில் பயிரிடுவதை தவிர்க்குமாறு தெரிவிக்கப்படுகிறது. நீர்ப்பாசன மேலாண்மையை மேம்படுத்தும் நோக்கில்,
“நீர் மறைய நீர் கட்டுதல்” முறையை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.
சம்பா பருவத்திற்காக கடலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை (TANSEDA) வாயிலாக 750 மெட்ரிக் டன் சான்று பெற்ற நெல் விதைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் வாயிலாக 142 மெட்ரிக் டன் விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதுடன் 581 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. தனியார் விதை விற்பனை நிலையங்கள் வாயிலாக 593 மெட்ரிக் டன் விதைகள் விநியோகிக்கப்பட்டு, 1616 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது.
ஒன்றிய அரசு விதை விநியோகத்திற்கான மானியத்தினை நிறுத்தியுள்ள நிலையில், 2026-27 ஆம் ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் மாநில நிதியிலிருந்து 85.40 இலட்சம் ஒதுக்கீட்டில் 427மெட்ரிக் டன்னில் 50 சதவீத மானியத்தில் சான்று பெற்ற நெல் விதைகள் விநியோகம் செய்யப்படும்.
ஒன்றிய அரசின் மாதாந்திர உர ஒதுக்கீட்டுத் திட்டத்தின்படி உரங்கள் தொடர்ந்து மாவட்டத்திற்கு வழங்கப்பட்டு தேவைக்கேற்ப போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது கடலூர் மாவட்டத்தில் நடப்பு செப்டம்பர், 2026 மாத தேவையான 4770 மெட்ரிக் டன் யூரியா, 1040 மெட்ரிக் டன் டிஏபி, 1550 மெட்ரிக் டன் பொட்டாஷ் மற்றும் 3530 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்களுக்கு 8773 மெட்ரிக் டன் யூரியா, 3348 மெட்ரிக் டன் டிஏபி, 1492 மெட்ரிக் டன் பொட்டாஷ் மற்றும் 8354 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு சில்லறை விற்பனை நிலையங்களில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் உரம், விதைப்பு, நடவு மற்றும் களையெடுப்பு உள்ளிட்ட பணிகளுக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள், வேளாண் பொறியியல் துறையின் வாயிலாக வேளாண் இயந்திர வாடகை மையங்களில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வேளாண் இயந்திரங்கள் தேவைப்படும் விவசாயிகள் “உழவன் செயலி”-யில் உள்ள இ-வாடகை 2.0 வசதியை பயன்படுத்திப் பதிவு செய்து பயன்பெறலாம்.
இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், 2026–27 ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேசிய பயிர் காப்பீட்டு வலைதளத்தில் செப்டம்பர் இரண்டாம் வாரம் முதல் “சம்பா நெல்” காப்பீடு பதிவு தொடங்கப்பட உள்ளதால், கடன் பெறும் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமும், கடன் பெறா விவசாயிகள் அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலுடன் பொது சேவை மையங்கள் (இ-சேவை மையங்கள்) அல்லது தேசிய பயிர்க் காப்பீட்டு வலைதளத்தின் “விவசாயிகள் கார்னர்” வாயிலாகவும் பதிவு செய்து பயன்பெறலாம்.
எனவே சம்பா சாகுபடிக்குத் தேவையான அனைத்து இடுபொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதால், அதிகளவில் விவசாயிகள் சம்பா சாகுபடியினை மேற்கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.