தமிழ்நாடு அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக மாற்றுத்திறனாளிகளின் உதவித் தொகையை உயர்த்தக் கோரி சிறை நிரப்பும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடையும் நிலையில், இந்த கூட்டத்தொடரிலேயே மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் தமிழக முதலமைச்சரை சந்தித்தபோது, சட்டமன்றத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தித் தருவதாக உறுதியளித்தார். ஆனால் இதுவரை சட்டமன்றக் கூட்டத்தொடரிலும், பட்ஜெட் கூட்டத் தொடரிலும் இதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், இறுதிக்கட்டமாக சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படுகிறது.
தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு, அண்டை மாநிலங்களில் வழங்கப்படுவது போன்று மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். கும்பாபிஷேக விழாவுக்கு மாற்றுத்திறனாளிகளை அழைக்க வேண்டும்
மதுரையில் நடைபெற உள்ள மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு மாற்றுத்திறனாளிகளையும் மாவட்ட நிர்வாகம் அழைத்து பங்கேற்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளை விழாவிற்கு அழைக்காவிட்டால், செப்டம்பர் 17-ம் தேதி கும்பாபிஷேக நாளன்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
ஆக்கிரமிக்கப்பட்ட இலவச வீட்டுமனையை மீட்டுத் தரக் கோரிக்கை
மேலக்குயில்குடியைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளிகளான ராஜாக்கண்ணு, சின்னக்கண்ணு ஆகியோருக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை வழங்கப்பட்ட நிலையில், அந்த இடத்தை வேறு ஒருவர் ஆக்கிர மித்துள்ளார். இதனால் அவர்கள் தங்களது வீட்டுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சுதந்திர தினத்திற்குள் அவர்களை வீட்டில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் சுதந்திர தினம் முடிந்தும் இதுவரை அவர்கள் தங்களது வீட்டில் குடியேற முடியவில்லை. அதிகாரிகள் அளித்த உறுதியை நிறைவேற்றி, உடனடியாக அவர்களை குடியமர்த்த வேண்டும்.
இந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படாவிட்டால், செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ள மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக நாளன்று அங்கு காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.