விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச் சாராயத்தை குடித்ததால் 11 பேர் இறந்த கொடுமையான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுகிறது. தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்ததினால் இத்தகைய கோர சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. விஷச் சாராய விநியோகம் நீண்டகாலமாக நடைபெற்று வருவதை காவல் துறை தடுக்க தவறியதால் இத்தகைய கோரமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மதுவிலக்கு அமல் பிரிவு என்று தனியாக செயல்பட்டாலும், இத்தகைய உயிரிழப்புகளை தடுக்காதது மிகுந்த வேதனையைத் தருகிறது. எந்தப் பகுதியிலாவது கள்ளச் சாராயம் விற்கப்படுகிறது என்றுச் சொன்னால், அந்தப் பகுதியிலுள்ள காவல் துறையினர்தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். அவர்களது அலட்சியப் போக்கு காரணமாகவே விஷச் சாராயம் விற்கப்படுவதும், அப்பாவி ஏழை, எளிய மக்கள் அதை அருந்தி இத்தகைய கோர சம்பவத்திற்கு பலியாவதும் நிகழ்கிறது. இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். விஷ சாராயத்தை அருந்தி உயிரிழந்த 11 பேர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 10 லட்சம் நிவாரணத் தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியிருக்கிறார். மேலும், விஷச் சாராயத்தை அருந்தி விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 40-க்கும் மேற்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அதிகாரிகளோடு இணைந்து அவசர ஆய்வுக் கூட்டமும் நடத்தியிருக்கிறார். இச்சம்பவம் நிகழ்ந்த உடனே விரைந்து சென்று கள ஆய்வு மேற்கொண்ட தமிழக முதல்-அமைச்ச மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைகள் மிகுந்த வரவேற்புக்குரியது. இத்தகைய கள்ளச்சாராய விற்பனையால் ஏற்படும் இறப்புகள் நிகழாமல் இருக்க காவல் துறையினர், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் பொறுப்பேற்கிற வகையில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *