தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு மற்றும் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் ஆகியோர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றனர்.

விழாவில் பங்கேற்ற தமிழக அமைச்சர்களை புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, பாகூர் சட்டமன்ற உறுப்பினர், திமுக பொருளாளர் இரா. செந்தில்குமார் ஆகியோர் குமந்தான்மேடு கிராம மக்களுடன் சென்று சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: – புதுச்சேரி மாநிலம், பாகூர் தொகுதிக்குட்பட்ட குமந்தான்மேடு கிராமம் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில பகுதியில் அமைந்துள்ளது. மேலும் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த ஆராச்சிக்குப்பம், பரிக்கல்பட்டு, பாகூர் மற்றும் அதை சார்ந்த சுமார் ஐந்து கிராம மக்கள் கல்வி, மருத்துவம் மற்றும் அன்றாட பணிகளுக்காக கடலூர் நகரத்தை சார்ந்தே உள்ளனர். குமந்தான்மேடு கிராமத்தில் அமைந்துள்ள தரைப்பாலம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ளது. இது மேற்கண்ட கிராம மக்கள் தினந்தோறும் கடலூர் சென்றுவர ஏதுவாக உள்ளது. தற்பொழுது கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தரைப்பாலம் சந்திப்பில் தடுப்புச்சுவர், தமிழக அரசின் மூலமாக அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் தரைப்பாலம் வழியாக கடலூர் செல்லும் மக்கள் சுமார் ஏழு கிலோமீட்டர் தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே, தரைப்பாலம் வழியாக கடலூர் செல்லும் மக்களுக்கு ஏதுவாக இணைப்பு சாய்வு சாலை அமைத்துத்தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது, திமுக தொகுதி செயலாளர்கள் பாண்டு. அரிகிருஷ்ணன், மணிகண்டன், அவைத் தலைவர் வெ.மூர்த்தி, பொருளாளர் பாவாடை, பிரதிநிதி பிரகாசம் மற்றும் தவமுருகன், முத்து, பாலகுரு,கண்ணன், சேகர், குமார், பார்த்திபன், சிவா, குமந்தான்மேடு பகுதி கிராம மக்கள் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *