வரும் 9 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை லாரி உரிமையாளர்கள் தள்ளி வைக்க வேண்டும்.
பழைய கனரக வாகனங்களுக்கு தகுதிச் சான்றுகள் புதுப்பிக்கும் கட்டண உயர்வில் விலக்கு அளிப்பது குறித்து முதலமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என
தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் 34- வது பொதுக்குழு கூட்டத்தில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் உறுதி.
தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் 34 வது பொதுக்குழு கூட்டம் மற்றும் 2025-2028 ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள பரமத்திவேலூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தமிழ் நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர்.
விழாவில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் ராஜேந்திரன், புதுடெல்லி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இதனையடுத்து தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியில் கூறியதாவது:–
தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் 3 கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர், அதன்படி 15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள பழைய கனரக வாகனங்களுக்கு தகுதிச் சான்றுகள் புதுப்பிக்கும் கட்டணம் ஒவ்வொரு வாகனங்களுக்கும் ஏற்ப மத்திய அரசு பலமடங்கு உயர்த்தியுள்ளது.
இந்த கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிப்பதும், ஆன்லைன் வழக்குகள் போடுவதை வரைமுறை படுத்த வேண்டும்
மேலும் அஞ்சல் மூலம் தகுதிச் சான்றுகள் அனுப்பி வந்த நிலையில் பழைய முறைப்படி அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பெற்றுக்கொள்வது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள், தமிழக முதல்வரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வரும் 9- ம் தேதி அறிவித்த வேலை நிறுத்த போராட்டத்தை தள்ளி வைக்க வேண்டும், அதற்குள் லாரி உரிமையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.
15 ஆண்டுகளுக்கு மேல் தகுதியாக இருக்கும் கனரக வாகனங்களை இயக்கலாம் என்பது தான் நமது விருப்பம் .ஆனால் மத்திய அரசு அதிகார பலத்தை பயன்படுத்தி இத்தகைய செயலில் ஈடுப்பட்டு வருவதை எதிர்த்து போராட வேண்டிய நிலை உள்ளது என அமைச்சர் சிவசங்கர் பேட்டி கூறினார். விழாவில் தமிழ் நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் நிர்வாகிகள், மாநிலங்களவை உறுப்பினர் இராஜேஷ்குமார், எம்.பி.மாதேஸ்வரன், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், முன்னாள் அமைச்சர் தங்கமணி, பரமத்தி வேலூர் எம் எல் ஏ இன்ஜினியர் சேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, பரமத்தி பேரூராட்சித் தலைவர் மணி உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.