மாவட்ட ஆட்சியருடன் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல்

இளம் வயதிலேயே பொது அறிவை வளர்த்துக் கொண்டால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவது எளிது

மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கு அறிவுரை

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது.

                                      பள்ளி தலைமையாசிரியர் சொக்கலிங்கம் வரவேற்றார்.  தேவகோட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் செந்தில்குமரன், தேவகோட்டை வட்டாட்சியர் அசோக்குமார் , வட்டார கல்வி அலுவலர்கள் லட்சுமிதேவி ,மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

                            சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா  அஜித்  நிகழ்வுக்கு தலைமை தாங்கி  மாணவர்களிடம் பேசுகையில், இளம் வயதிலேயே மாணவர்கள் பொது அறிவை அதிகம் வளர்த்துக் கொண்டால் மிக எளிதாக ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறலாம். நான்  இரண்டு ஆண்டுகள் தொடர்  முயற்சி எடுத்து படித்து போட்டி தேர்வில் வெற்றி பெற்றேன். ஐஏஎஸ் ஆன பின்பு சமுதாயத்தில் பல்வேறு நல்ல விஷயங்களை செய்வதற்கு வாய்ப்புக்கள் கிடைத்துள்ளது.

                                 இப்பள்ளியில் ஆறு வருடங்களுக்கு முன்பாக  நான் தேவகோட்டை சார் ஆட்சியராக இருந்தபோது கலந்துகொண்ட நிகழ்வில் அப்போதைய மாணவர்கள் ஐயப்பன் மற்றும் காயத்ரி ஆகியோர்   மிகச் சிறப்பாக பேசினார்கள். அவர்களுடைய நினைவுகள் எனக்கு மறக்க முடியாத பசுமையான நிகழ்வாக உள்ளது.

                          இப்பள்ளியில் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான நிகழ்வில் ஆறு வருடங்களுக்கு முன்பாக நான் பங்கேற்றபோது மாணவர்களின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியதாக இருந்தது. தொடர்ந்து  இப்பள்ளி ஆறு வருடங்களாக அதேபோன்று இப்போதும் மாணவர்களின் நல்ல முன்னேற்றத்துடன் செயல்படுவது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                              பொதுமக்களும் , மாணவர்களாகிய நீங்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் அரசாங்கத்தின் பல்வேறு செயல்பாடுகளை சிறப்பாக  செய்ய முடியும் என்று பேசினார். மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார். நிறைவாக ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினார். மாவட்ட ஆட்சியரின் பேச்சினை கேட்டு சிறப்பாக பின்னூட்டம் வழங்கிய மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக எழுத்தர்  சரவணன் உட்பட ஏராளமான பெற்றோர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *