கோவை குமரகுரு கல்லூரியில் ‘க்ரு’ கல்வி தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் உயர் நிலை பள்ளி மாணவர்களுக்கான 2 நாள்’மாணவர் மாநாடு’
சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கல்வி தொழில்நுட்ப நிறுவனமான ‘க்ரு’ (Kruu) சார்பில் கோவை சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு பொறியியல் கல்லூரி வளாகத்தில் உயர் நிலை பள்ளி மாணவர்களுக்கான 2 நாள் ‘மாணவர் மாநாடு’ நடைபெற்றது.
ஆக்ஸ்போர்ட், ஐ.ஐ.டி. போன்ற பெருமைக்குரிய உயர்கல்வி நிறுவனங்களை சேர்ந்த நிபுணர்கள் உதவியுடன்,இந்த ‘க்ரு’ நிறுவனமானது இது வரை 470,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழக்கமான வழியில் அல்லாமல் திட்டங்கள்/விளக்க மாதிரிகள் மூலமாக கற்றல் அனுபவத்தை வழங்கும் வழக்கத்தை கொண்ட ஒரு நிறுவனம் ஆகும். வகுப்பறைகளை தாண்டி ஒரு புது மாதிரியான கற்றல் அனுபவத்தை மாணவர்கள் வழங்கும் நோக்கம் கொண்டது இந்த நிறுவனம்.
இந்த 2 நாள் நிகழ்வு “படைப்பாக்க ஆய்வகம்” (Creation Lab) என்று அழைக்கப்பட்டது. இதில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) போன்ற துறைகள் சார்ந்த தலைப்புகளுக்கு 40-க்கும் மேற்பட்ட தீர்வுகள் உருவாக்கப்பட்டு அவை இந்த நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த தீர்வுகள் எல்லாமே மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஆரம்பக்கட்ட மாதிரிகள், செயல்விளக்கங்கள், நிறுவல்கள் மற்றும் யோசனை முன்மாதிரிகள் ஆகும்.
இந்தியா மற்றும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச நாடுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட திறமையான உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இந்தக் கருத்துகளை வடிவமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை தாண்டி, கலை மற்றும் தொழில்முனைவு ஆகிய துறைகளுக்கும் முக்கியத்துவம் அளித்தது.
வெறும் மனப்பாடம் செய்யும் கற்றல் முறைக்கு பதிலாக மாணவர்களை ஆர்வத்துடன் ஆய்வு செய்ய தூண்டும் முறை, ஒரு கோட்பாடை உள்வாங்கி அதை மீண்டும் உருவாக்க அவர்களை ஊக்கப்படுத்தும் முறை என இன்று இந்தியாவில் உள்ள பல பள்ளிகள் தற்போது ஏற்றுக் கொள்ளத் தொடங்கும் ஒரு அடிப்படையான மாற்றத்தை, இந்த மாநாட்டின் மூலம் ‘க்ரு’ நிறுவனம் உணர்த்தியுள்ளது.
இந்த நிகழ்ச்சி அவர்களின் சிந்தனை, கேள்வி கேட்கும் முறை மற்றும் உருவாக்கும் விதத்தை விரிவுபடுத்தியது.
இத்துடன், இந்த நிகழ்ச்சியில், கல்வியாளர்களும் நிபுணர்களுமான அனில் ஸ்ரீனிவாசன் (க்ரு மற்றும் ராப்சோடி நிறுவனங்களின் நிறுவனர்), தேவ்தத் பட்நாயக் (எழுத்தாளர் & புராணவியலாளர்), அனிதா ரத்னம் (பாரம்பரிய நடனக் கலைஞர் & தொழில்முனைவோர்), விவேக் சுந்தர் (கேரளா ஆயுர்வேதா லிமிடெட் டின் தலைமை செயல் அதிகாரி; முன்னாள் சிஓஓ, ஸ்விக்கி), மற்றும் ஸ்ரீவி இராமசுப்ரமணியம் (சிராகுஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர்), ஆகியோருடன் பல உலகளாவிய படைப்பாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கல்வித் தலைவர்களும் மாணவர்கள் முன் சிறப்புரையாற்றினர்.
“இந்திய வகுப்பறைகளுக்கு தொழில்முனைவு தேவை” , “மாணவர்களின் கற்றல் அனுபவத்தில் திட்ட அடிப்படையிலான கற்றல் முறை மூலம் ஒரு புதிய பார்வை தேவை,” என்ற கருத்துடன் ‘க்ரு’ நிறுவனத்தின் நிறுவனர் அனில் ஸ்ரீனிவாசன் பேசினார்.
“மாணவர்கள் தங்கள் கருத்தை செம்மைப்படுத்த சிராகுஸ் பல்கலைக்கழகப் பேராசிரியரான ஸ்ரீவி போன்ற வழிகாட்டிகளுடனும், அவர்களின் வணிக மாதிரிகளை உறுதிப்படுத்த கேரளா ஆயுர்வேதா லிமிடெட்டின் தலைமை செயல் அதிகாரிவிவேக் போன்றோருடனும், மற்றும் சமூக உணர்வைத் தூண்ட பயன்படுத்தப்பட்ட நாடக நிபுணர்களுடனும் இணைத்தோம். அவர்கள் எப்படி உருவாக்குவது என்பதை மட்டும் கற்றுக்கொள்ளவில்லை; ஏன், யாருக்காக உருவாக்குவது என்பதையும் கற்றுக் கொண்டனர்,” என அனில் ஸ்ரீனிவாசன் கூறினார்.
இந்த மாநாட்டில் பங்கேற்க 500 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தாலும், போட்டித்தன்மை கொண்ட 200 மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் மற்றும் தொழில்முனைவு ஆகிய முக்கிய துறைகளில் அவர்கள் தங்களின் அடிப்படைத் யோசனைகளைச் சாத்தியமான, செயல்பாட்டுத் தீர்வுகளாக மாற்ற, 20-க்கும் மேற்பட்ட நிபுணர்களால் வழிகாட்டப்பட்டனர்.
மாணவர்கள் நிஜ-உலகச் சிக்கல்களுக்குத் தீர்வுகளை வழங்குவதிலும், தங்கள் ஆய்வுப்பூர்வமான கேள்வியறிவைப் பயன்படுத்துவதிலும், அர்த்தமுள்ள, எதிர்காலத்திற்குத் தயாரான தீர்வுகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தினர் .
“புதிய கண்டுபிடிப்புகளின் தரம், குறிப்பாகத் தொழில்நுட்பச் சாத்தியக்கூறு மற்றும் மனிதனை மையப்படுத்திய வடிவமைப்பு ஆகியவற்றின் தடையற்ற ஒருங்கிணைப்பு வியக்கத்தக்கதாக இருந்தது,” என்று க்ரு நிறுவனத்தின் இயக்குனர் ராகுல் ராமச்சந்திரன் கூறினார்.
“பள்ளி மாணவர்களை வெறும் கற்பவர்கள் என்று கருதாமல், தலைவர்கள் மற்றும் படைப்பாளர்களாக நாம் நடத்தும் போது, அவர்கள் அந்த நிலைமைக்கு உயர்ந்து நிற்கிறார்கள் என்பதை இது நிரூபிக்கிறது. அவர்கள் வெறும் யோசனைகளை மட்டும் முன்வைக்கவில்லை; அவர்கள் உண்மையான தீர்வுகளைக் கட்டியெழுப்பினர்,” என அவர் கூறினார்.
இந்த மாணவர் மாநாடு , கலை, வணிகம் மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பிரிவுகளில் சிறந்து விளங்கியவர்களை அங்கீகரிக்கும் ஒரு விருது வழங்கும் விழாவுடன் நிறைவடைந்தது.