தமிழ்நாடு- புதுச்சேரி என இரண்டு இடங்களில் வாக்களிக்கும் வாக்காளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தல்.

மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ. ஜெகன்நாதன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு.

18-வது நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில தினங்களில் தேதி அறிவிக்கப்படும் நிலை உள்ளது. புதுச்சேரி முழுவதும் உள்ள 30 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குகளை செலுத்தும் வாக்காளர்கள், இரண்டு இடங்களில் அதாவது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் வாக்குரிமை வைத்துள்ளனர். இத்தகைய வாக்காளர்கள் இரண்டு இடங்களிலும் வாக்கு செலுத்தும் நிலை உள்ளது.

இரண்டு இடங்களில் வாக்காளர்களாக பதிவு செய்துள்ளது குறித்து, புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையத்திற்கும், மாநில தேர்தல் துறைக்கும், மாவட்ட நிர்வாகங்களுக்கும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இரண்டு முறை மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பாக மனு அளிக்கப்பட்டது.

புதுச்சேரி மாவட்டத்தில், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட எல்லையோர கிராமங்களில் உள்ள வாக்காளர்கள் இரண்டு வாக்குச்சாவடிகளில் வாக்குரிமை வைத்துள்ளனர். அதேபோல் காரைக்கால் மாவட்டத்தில் அருகில் உள்ள மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்களைச் சார்ந்த வாக்காளர்கள் இரண்டு வாக்குச்சாவடிகளில் வாக்குரிமை வைத்துள்ளனர். மாகி தொகுதியில் கண்ணனூர் மாவட்டம் மற்றும் தலைச்சேரி பகுதி வாக்காளர்கள் இரண்டு வாக்குச்சாவடிகளில் வாக்குரிமை வைத்துள்ளனர். ஏனாம் தொகுதியில் கிழக்கு கோதாவரி மாவட்ட வாக்காளர்கள் இரண்டு இடங்களில் வாக்குரிமை வைத்துள்ளனர்.

தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளாவைச் சேர்ந்த வாக்காளர்கள் போலியாக புதுச்சேரியில் வாக்காளர்களாக பதிவு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து எமது இயக்கம் சார்பாக விரிவாக மாநில தேர்தல் ஆணையத்திற்கும் தேர்தல் துறைக்கும் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதுச்சேரி அரசும், தேர்தல் துறையும் 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வருவதை மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

இரண்டு இடங்களில் வாக்குரிமை வைத்துள்ள வாக்காளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்திடவும், போலியாக பதிவு செய்துள்ள இரு மாநில வாக்காளர்களை உடனடியாக நீக்க வேண்டும். இதனை வலியுறுத்தி எதிர்வரும் மார்ச் 27 புதன்கிழமை அன்று மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பாக, சமூக ஜனநாயக இயக்கங்கள் பங்கேற்று, மாநில தேர்தல் ஆணையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்
கோ.அ. ஜெகன்நாதன் செயலாளர் மக்கள் வாழ்வுரிமை இயக்கம் புதுச்சேரி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *