தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் ரூ.19.5 கோடி மதிப்பீட்டில் 650 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா
அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் வழங்கினர்.
தாராபுரம்,திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ரூ.19.5 கோடி மதிப்பீட்டில் 650 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் வழங்கினர்.
தாராபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழாவிற்கு வருவாய் கோட்டாட்சியர் (ஆர்டிஓ) பெலிக்ஸ் ராஜா தலைமை தாங்கினார். இந்த விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினர்.
விழாவில் பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன்,“தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, ஏழை மற்றும் எளிய மக்களுக்கு சொந்த வீடு என்ற கனவை நிறைவேற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வீடு என்பது வெறும் கட்டிடம் மட்டுமல்ல. அது குடும்பத்திற்கு பாதுகாப்பு, மரியாதை மற்றும் எதிர்கால நம்பிக்கை ஆகும்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர்,“பல ஆண்டுகளாக வீட்டுமனை இல்லாமல் வாடிய மக்களுக்கு, எந்த விதமான பேதமும் இன்றி இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்கள் உண்மையான பயனாளிகளை சென்றடைய வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கம். இந்த பட்டாக்கள் மூலம் பயனாளிகள் வீடு கட்டி, நல்ல வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்” என கூறினார்.
அதனை தொடர்ந்து,“தாராபுரம், கொளத்துப்பாளையம், ருத்ராவதி, சின்னக்காம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு இன்று வழங்கப்பட்டுள்ள பட்டாக்கள், அவர்களின் வாழ்க்கையில் புதிய தொடக்கமாக அமையும். அரசு மக்களுடன் உள்ளது. மக்கள் நலனே இந்த அரசின் அடையாளம்” என்று அமைச்சர் தெரிவித்தார்
இந்த விழாவில் திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல குழு தலைவர் இல.பத்மநாபன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், தாராபுரம் நகர செயலாளர் முருகானந்தம், நகராட்சி தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன், தாசில்தார் ராமலிங்கம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.