தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் த.வெ.க செயல்வீரர் கூட்டம், செங்கோட்டையன் பங்கேற்பு..
2026-ல் விஜய் முதலமைச்சர், அவரை ஏற்றுக்கொள்பவர்களுடன் மட்டுமே கூட்டணி – செங்கோட்டையன் பேச்சு திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தாராபுரம் – காங்கேயம் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயல்வீரர் கூட்டம், உடுமலை சாலையில் உள்ள அரிமா அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் யுவராஜ் மகேஷ் தலைமை வகித்தார். இதில் முன்னாள் அமைச்சரும், த.வெ.க மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான கே.ஏ. செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
நேற்று இரவு 7 மணியளவில் தாராபுரம்- நஞ்சியம்பாளையம் பகுதியில் த.வெ.க வடக்கு ஒன்றிய செயலாளர் ஸ்ரீகாந்த் தலைமையில் செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்து, பட்டாசு வெடித்து வரவேற்றனர். இதனால் சாலை முழுவதும் தொண்டர்கள் திரண்டதால், சில நேரம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து வடதாரை, காமராஜபுரம், அண்ணா சிலை அலங்கியம் ரோடு, பெரிய காளியம்மன் கோவில் அருகே உள்ளிட்ட பகுதிகளில் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது அம்பேத்கர் வேடமணிந்து வந்த த.வெ.க தொண்டர் ராஜா, செங்கோட்டையனுக்கு சால்வை அணிவித்து புத்தகம் வழங்கினார்.
இரவு 8.30 மணியளவில் அரிமா அரங்கிற்கு வந்த செங்கோட்டையனுக்கு தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். ஒரு கட்டத்தில் பட்டாசு பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடியதால், பட்டாசுகள் வானில் வெடித்து சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் உடுமலை – தாராபுரம் சாலையில் தற்காலிக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அரங்கத்திற்குள் நுழைந்த செங்கோட்டையனை பெண்கள் ஆரத்தி எடுத்து, மலர் தூவி வரவேற்றனர். கூட்ட நெரிசல் காரணமாக அவர் உள்ளே செல்வதில் சிரமம் ஏற்பட்டதால், சற்று நேரம் நாற்காலியில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டார். பின்னர் தொண்டர்கள் ஆட்டம், விசில், கோஷம் எழுப்பி அரங்கத்தை உற்சாகத்தில் மூழ்கடித்தனர். அதன் பின்னர் த.வெ.க உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேடையில் பேசிய செங்கோட்டையன்,“தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பெண்கள், இளைஞர்கள், படித்தவர்கள் என அனைத்து தரப்பினராலும் விரும்பப்படும் தலைவராக உருவெடுத்துள்ளார். மலேசியாவில் நடைபெற்ற ‘ஜனநாயகன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் விஜய்க்கு கிடைத்த வரவேற்பு உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்தது. 1972-ல் எம்.ஜி.ஆர், 1988-ல் ஜெயலலிதாவுக்கு இருந்த மக்கள் ஆதரவு அலையை, இன்று விஜயிடம் பார்க்கிறேன்” என்றார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தான் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர் என்றும், அவரை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே த.வெ.க கூட்டணி அமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார் “50 ஆண்டுகள் ஒரே இயக்கத்தில் இருந்த நான், தற்போது விஜய்யின் தலைமையிலான த.வெ.க வெற்றிக்காக எனது அரசியல் அனுபவத்தை முழுமையாக பயன்படுத்துவேன்” என்றார்.
ஊழல் குறித்த கேள்விக்கு,“ஆளும் திமுக ஆட்சியும், முன்னாள் அதிமுக ஆட்சியும் ஊழல் விஷயத்தில் பெரிய வித்தியாசம் இல்லை. ஜனநாயகத்தில் மக்களுக்கு நேர்மையான ஆட்சி தேவை. த.வெ.க ஆட்சியில் நேர்மையான நல்லாட்சி வழங்கப்படும்” என்றார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சாமிநாதன் கருத்துகளுக்கு பதிலளித்த செங்கோட்டையன்,“யார் அரசியல் காமெடியன் என்பதை விரைவில் மக்கள் தீர்மானிப்பார்கள்” என தெரிவித்தார் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக எழுந்த கேள்விக்கு,“பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு, வேலை இல்லாத ஆண்களுக்கு இருசக்கர வாகனம் உள்ளிட்ட திட்டங்கள் த.வெ.க ஆட்சியில் செயல்படுத்தப்படும்” என்றார்.
இந்த மாத இறுதிக்குள் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும், தாராபுரம் தொகுதி த.வெ.க வெற்றி தொகுதியாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த செங்கோட்டையன், த.வெ.க ஆட்சி அமைந்தால் கல்விக் கடன், வேலைவாய்ப்பு, சமூகநீதி உள்ளிட்ட துறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.