10 ஆண்டுகளாக மாற்றப்படாத மின் மோட்டாரால் அடிக்கடி பழுது ஏற்பட்டு 10ற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகம் தடை ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், அரசம்பட்டி தென்பெண்ணையாற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதிலிருந்து போச்சம்பள்ளி, அங்கம்பட்டி, மத்தூர், கமலாபுரம், அத்திப்பள்ளம் உள்ளிட்ட 10ற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அரசம்பட்டியில் தலைமைநீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு, ஒப்பந்ததாரர் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த தலைமைநீரேற்று நிலையத்தில் உள்ள மின் மோட்டார்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மாற்றப்படாமல், பழைய மோட்டாரை சரிசெய்து இயக்கி வருவதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு, 10 கிராமங்களுக்கான தண்ணீர் வினியோகம் தடை பட்டு வருகிறது.
இந்த நிலையில் பழைய போச்சம்பள்ளி பகுதியில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு இப்பகுதியில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. கடந்த 20 நாட்களுக்கு மேலாக இப்பகுதிக்கு முற்றிலுமாக குடி தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள மக்கள் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாய கிணறுகளுக்கு சென்றும், விலை கொடுத்தும் தண்ணீர் வாங்கியும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் இருந்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் தனியார், அரசு வேலைக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து பொதுபணித்துறை உதவி செயற் பொறியாளர் பன்னீர்செல்வத்திடம் கேட்ட போது, விசாரித்து காலதாமதமின்றி தண்ணீர் தடைபடாமல் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *