தூத்துக்குடியில் உப்பளங்களில் அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி ராஜபாண்டி நகரில் உள்ள உப்பள தொழிலாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், கலந்துரையாடி உப்பளத்தினை பார்வையிட்டு தெரிவித்ததாவது: தமிழ்நாட்டிலேயே தூத்துக்குடி மாவட்டத்தில்தான் அதிகளவில் உப்பளங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் 70 சதவீத உப்பு உற்பத்தி தூத்துக்குடி மாவட்டத்தில்தான் செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 20,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் உப்பளங்கள் உள்ளன.
மேலும் உப்பளத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 50,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அமைப்புசாரா தொழிலாளர்களாக உள்ளனர். உப்பள தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் மழைக்கால நிவாரணம் முறையாக கிடைக்கிறதா என்று ஆய்வு செய்வதற்கும், அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிவதற்கும் ராஜபாண்டி நகரில் உள்ள உப்பள தொழிலாளர்களுடன் உரையாடினேன்.
உப்பள தொழிலாளர்களுக்கு வருகிற பிப்ரவரி 6 மற்றும் 7ம் தேதிகளில் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் துறையின் முயற்சியுடன் சங்கர நேத்ராலயா போன்ற தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து மாபெரும் மருத்துவ முகாம்கள் 9 இடங்களில் நடத்தப்பட உள்ளது. முகாம்களில் கண் பரிசோதனை, இரத்த அழுத்தம் மற்றும் பொதுவான உடல் பரிசோதனைகள் செய்யப்படவுள்ளது. மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை இல்லாதவர்களுக்கு அட்டை வழங்குவதற்கும், கண் கண்ணாடிகள் தேவைப்படுபவர்களுக்கு வழங்கவும் உள்ளோம்.தமிழக அரசின் மழைக்கால நிவாரணம் பெறுவதற்கான தொழிலாளர் நலத்துறை மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அட்டை வழங்குவதற்கும், ஆதார் எண் இணைப்பதற்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். உப்பளங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் ஓய்வு அறை வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்துள்ளனர். எனவே உப்பளங்களில் அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கும், ஏற்கனவே அடிப்படை வசதிகள் உள்ள உப்பளங்களில் முறைப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தெரிவித்தார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *