கடலூர் மாவட்டம், புவனகிரி ஊராட்சி ஒன்றியம், கிருஷ்ணாபுரம் பகுதியில் வட்டார விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவிக்கையில், உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் ரூ.1753 கோடி மதிப்பில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடலூர்,தர்மபுரி, தென்காசி, திருச்சி மற்றும் சென்னை மாவட்டங்கள் முன்னோடி மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் மறுவாழ்வு சேவைகள் மற்றும் திட்டங்கள் சென்றடைய உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,கடலூர் மாவட்டத்தில் உட்கோட்ட அளவில் கடலூர், சிதம்பரம் மற்றும் மங்களம்பேட்டை ஆகிய மூன்று இடங்களில் விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் 28.02.2025 அன்று திறக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், வட்டார அளவில் 20 விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் செயல்படுத்திட திட்டமிடபட்டு 15 வட்டாரங்களில் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் துவங்கபட்டு நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள 5 மையங்களில் நேற்றைய தினம் புவனகிரி வட்டாரத்திற்கான மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புவனகிரி மேம்படுத்தபட்ட சுகாதார மைய வளாகத்தில் உள்ள கட்டிடத்தினை ரூ.17.20 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு ஒரு வட்டார ஒருங்கிணைப்பாளர் தலைமையில் புவனகிரி விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இம்மையத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான உளவியல் பயிற்சி, இயன்முறை பயிற்சி, சிறப்பு ஆசிரியர்களை கொண்டு அறிவுசார் குறைபாடுடைய, செவின் திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைகள் வழங்கப்பட உள்ளது.
அதுமட்டுமின்றி முன்கள பணியாளர்களை கொண்டு புவனகிரி வட்டாரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வீடுகளை கண்டறிதல், மாற்றுத்திறனாளிகளுக்கான தேவைகளை கண்டறிதல் மற்றும் கணக்கெடுத்தல், மையங்களுக்கு வரஇயலாத மாற்றுத்திறனாளிக்கு இல்லங்களுக்கே சென்று தேவையான பயிற்சிகளையும்,தேவைகேற்ப உதவி உபகரணங்களையும் வழங்கபட உள்ளனர். புவனகிரி வட்டாரத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் இம்மையத்தினை அணுகி உடல் நலத்தை மேம்படுத்தி வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாலசுந்தரம், துணை இயக்குனர் சுகாதார பணிகள் மரு.பொற்கொடி, வட்டார மருத்துவ அலுவலர் மரு.சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.