சர்வதேச கராத்தே, சிலம்பப் போட்டி: 1000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு!
யுனிவர்சல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பில் சர்வதேச அளவிலான கராத்தே மற்றும் சிலம்பப் போட்டிகள் (25.01.2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா, இலங்கை மற்றும் மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்களது வீரத்தை வெளிப்படுத்தினர்.
இந்த விழாவிற்கு முன்னாள் உணவுத்துறை அமைச்சர் உயர்திரு காமராஜ் அவர்கள் தலைமை தாங்கி போட்டிகளைத் தொடங்கி வைத்தார். உலக சிலம்பம் விளையாட்டு சங்கத்தின் நிறுவன தலைவர் முனைவர் சுதாகரன் அவர்கள் முன்னிலை வகித்து வீரர்களை ஊக்கப்படுத்தினார்.
மலேசியாவிலிருந்து மலேசியா எம்.ஜி.ஆர் திரு. காசிராஜா மற்றும் இலங்கையிலிருந்து ‘பாபு மாஸ்டர்’ என்று அழைக்கப்படும் திரு. யசோதரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். இவர்களுடன் அந்தந்த நாடுகளைச் சேர்ந்த தற்காப்புக் கலை ஆசான்களும், வீரர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், அண்டை நாடுகளிலிருந்தும் வந்திருந்த வீரர், வீராங்கனைகள் கராத்தே மற்றும் சிலம்பம் ஆகிய பிரிவுகளில் மோதுகையில் தங்களது அபார திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக் கோப்பைகளும், பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
சர்வதேச அளவில் தற்காப்புக் கலைகளை வளர்க்கவும், மாணவர்களிடையே ஒழுக்கத்தையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தவும் இந்த போட்டிகள் ஒரு சிறந்த களமாக அமைந்ததாக விழாக் குழுவினர் தெரிவித்தனர்.