ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சி தனது செய்தி குறிப்பில் கூறியதாவது…
மூடப்பட்ட பஞ்சாலைகளை மீட்டெடுக்க உடனடியாக டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்க வேண்டும்-முதலமைச்சருக்கு ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சியின் வலியுறுத்தல்**
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பொருளாதார முதுகெலும்பாகவும், தொழில்துறை வரலாற்றின் முக்கிய அங்கமாகவும் விளங்கிய பாரதி, சுதேசி, பாண்டிச்சேரி டெக்ஸ்டைல்ஸ், பின்கோ மற்றும் காரைக்கால் ஜெய்பிரகாஷ் ராணி மாலே ஆகிய அரசுப் பஞ்சாலைகள் மூடப்பட்டிருப்பது, ஆயிரக்கணக்கான தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும், குறைந்தபட்சம் 15,000 இளைஞர்களின் வேலைவாய்ப்பு எதிர்காலத்தையும் கடுமையாக பாதித்துள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் திரு. ந. ரங்கசாமி அவர்கள், மத்திய அரசு புதுச்சேரிக்கு தேவையான நிதியுதவி வழங்க தயாராக உள்ளது என தொடர்ந்து தெரிவித்து வரும் சூழலில், எந்தத் தாமதமும் இன்றி உடனடியாக புதுடெல்லி சென்று இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்து, மூடப்பட்ட பஞ்சாலைகளை மீட்டெடுப்பதற்கான மத்திய ஜவுளித் துறை நிதியை உறுதிப்படுத்த வேண்டும் என ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.
இந்தச் சந்திப்பின் முதன்மை நோக்கம், மத்திய அரசின் PM–MITRA (மெகா ஜவுளிப் பூங்கா) திட்டத்தின் கீழ், புதுச்சேரியில் உள்ள அனைத்து மூடப்பட்ட அரசுப் பஞ்சாலைகளையும் நவீனமயமாக்கி மீண்டும் இயக்க தேவையான முழுமையான நிதியுதவியைப் பெறுவதாக இருக்க வேண்டும்.
பஞ்சாலை மீட்பு – அவசியத்தின் காரணங்கள்
பாரம்பரியம் மற்றும் வாழ்வாதாரம் :
இந்தப் பஞ்சாலைகள் ஒரு காலத்தில் புதுச்சேரியின் முக்கிய வருவாய் ஆதாரமாக இருந்த அரசுத் துறை நிறுவனங்களாகும். அவை மீண்டும் செயல்படத் தொடங்கினால், நேரடியாகவும் மறைமுகமாகவும் 15,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கும் அவர்களைச் சார்ந்த தொழில்களுக்கும் வாழ்வாதாரம் கிடைக்கும்.
இளைஞர் வேலைவாய்ப்பு :
ஆலைகளை நவீனமயமாக்கி, விரிவாக்கம் செய்வதன் மூலம், டிப்ளமோ, ஐ.டி.ஐ. மற்றும் பொறியியல் படித்த புதுச்சேரி இளைஞர்களுக்கு ஜவுளித் துறையில் நிரந்தரமான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். இது புதுச்சேரியின் வேலைவாய்ப்பின்மை பிரச்சனைக்கு நீடித்த தீர்வாக அமையும்.
பொருளாதார நெருக்கடி :
ஆலைகள் மூடப்பட்டதால், தொழிலாளர்களின் நிலுவை சம்பளங்கள், ஓய்வூதியப் பிரச்சனைகள் மற்றும் அரசுக்கான வருவாய் இழப்புகள் அதிகரித்து, புதுச்சேரியின் கடன் சுமையை மேலும் உயர்த்தி வருகின்றன.
மத்திய அரசுத் திட்டத்தின் வாய்ப்பு :
மத்திய அரசு அறிவித்துள்ள PM–MITRA மெகா ஜவுளிப் பூங்கா திட்டம், பஞ்சாலைகளை நவீனப்படுத்தவும், புதிய உள்கட்டமைப்புகளை உருவாக்கவும் தேவையான நிதி ஆதாரத்தை வழங்கும் திறன் கொண்டது. மத்திய–மாநில அரசுகள் ஒரே அரசியல் கூட்டணியில் உள்ள இந்தச் சூழலை, முதலமைச்சர் தவறவிடக் கூடாது.
கோரிக்கை – நான்கு அம்சத் திட்டம்
- மத்திய அரசின் முழுமையான நிதியுதவி :
மூடப்பட்ட அனைத்து அரசுப் பஞ்சாலைகளையும் முழுமையாக மீட்டெடுத்து, நவீனமயமாக்கி மீண்டும் இயக்க தேவையான முழு நிதியையும் PM–MITRA திட்டத்தின் கீழ் மத்திய அரசே வழங்க உறுதி செய்ய வேண்டும். - விரிவான திட்ட அறிக்கை (DPR) :
ஜவுளித் துறை வல்லுநர்கள் அடங்கிய குழுவின் மூலம், குறிப்பிட்ட காலக்கெடுவுடன் கூடிய விரிவான திட்ட அறிக்கையை உடனடியாகத் தயாரித்து மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். - தொழிலாளர் நலன் & இளைஞர் முன்னுரிமை :
ஆலைகளை மீண்டும் இயக்குவதற்கு முன், தொழிலாளர்களின் நிலுவை சம்பளம், ஓய்வூதியம் மற்றும் ஈட்டுத் தொகைகள் வழங்கப்பட வேண்டும். புதிதாக உருவாக்கப்படும் குறைந்தபட்சம் 15,000 வேலைவாய்ப்புகளில் புதுச்சேரி இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். - நிரந்தர மேற்பார்வைக் குழு :
மீட்கப்பட்ட பஞ்சாலைகளின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளை கண்காணிக்க, தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அடங்கிய நிரந்தர மேற்பார்வைக் குழு அமைக்கப்பட வேண்டும்.
ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சியின் எச்சரிக்கை
“புதுச்சேரியின் தொழில்துறை வரலாற்றை அழிக்கும் இந்தச் செயலற்ற நிலையை எமது கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது. முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் தாமதமின்றி டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து, பஞ்சாலைகளை மீட்டெடுப்பதற்கான உறுதியான நிதி ஒதுக்கீடும் செயல்திட்டமும் பெற்றுத் தர வேண்டும்.
வெறும் வாக்குறுதிகளைத் தாண்டி, தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும் பயன் அளிக்கும் வகையில் அரசு உடனடியாக செயல்படவில்லை என்றால், இந்தப் பொருளாதாரச் சீரழிவுக்கு எதிராக எமது கட்சி தொடர்ச்சியான ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுக்கும்.”
இப்படிக்கு,
ஏ.கே. ராஜசேகர்
நிறுவனத் தலைவர்,
ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சி.