நீடாமங்கலம்,
நீலன் பள்ளியில் விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு கபடிவீரர் அபினேஷ் சான்றுகள், கோப்பைகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார் …
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூர் மேல்பாதி கிராமத்தைச்சேர்ந்த கபடிவீரர் அபினேஷ்மோகன்தாஸ் பஹ்ரைன் நாட்டில் கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் 18 வயதுக்குட்பட்டோருக்கான கபடி போட்டியில் இந்தியஅணியில் ஆண்கள் பிரிவில் தங்கபதக்கம் வென்றார்.
தொடர்ந்து வடுவூர் கபடிவீரர் அபினேஷ் மோகன்தாஸ் தங்கப்பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமைசேர்த்ததற்கு தமிழ்நாடு அரசு , அரசியல் கட்சியினர் , சமூக ஆர்வலர்கள் , சொந்த ஊர் மேல்பாதி கிராமமக்கள் பாராட்டியும் , வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நீடாமங்கலத்தில் உள்ள நீலன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் நீலன் அசோகன் தலைமையில் பள்ளி செயலாளர் நீலன் சுரேன் , பள்ளி முதல்வர் குணசீலன் முன்னிலையில் கபடி போட்டியில் வெற்றிபெற்று தங்கபதக்கம் வென்று இந்தியாவிற்கும் , தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த கபடிவீரர் அபினேஷ் மோகன்தாஸ்க்கு வரவேற்பு அளித்து பாராட்டுவிழா நடத்தி ரூபாய் 10 ஆயிரம் பரிசுதொகை வழங்கி கௌரவித்தனர்.
மேலும் நீலன் பள்ளியில் விளையாட்டுப்போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கபடிவீரர் அபினேஷ் மோகன்தாஸ் சான்றுகள், கோப்பைகள் வழங்கி தான் பெற்ற தங்கப்பதக்கத்தை காண்பித்து அனைவரும் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இந்த பாராட்டுவிழாவில் வடுவூர் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் பொன்.கோவிந்தராஜ் , வடுவூர் ஏஎம்சி கபடிகழகம் ஞானஸ்கந்தன் , சோழநாடு உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் செந்தில் , மற்றும் பள்ளி ஆசிரியைகள் , மாணவ , மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.