திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன ஓபுளாபுரம் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ராகவேந்திரா சிட்டி என்ற குடியிருப்பு பகுதி உருவாக்கப்பட்டது. சுமார் 300 வீட்டு மனைகளைக் கொண்ட இந்த குடியிருப்பு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வீடுகளை கட்டி குடியேறி வசித்து வருகின்றனர்.

புதியதாக குடியிருப்பு பகுதியாக உருவாக்கப்பட்ட போதிலும் முறையான சுடுகாடு வசதி ஏற்படுத்தி தரவில்லை என புகார் தெரிவிக்கப்படுகிறது. நேற்று விக்ரமன் என்ற முதியவர் உயிரிழந்த நிலையில் அவரது சடலத்தை அடக்கம் செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் சடலத்துடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு தனி சுடுகாடு வசதி இல்லாததால் அருகில் உள்ள கிராமத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், தற்காலிகமாக அதிகாரிகள் நீண்ட தூரத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் அடக்கம் செய்ய அறிவுறுத்துவதாக தெரிவித்தனர். புதியதாக உருவாக்கப்பட்டுள்ள குடியிருப்பு பகுதிக்கு தனியாக சுடுகாடு வசதி அமைத்து தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு நிலவி வருகிறது.
செய்தியாளர் S.சீனிவாசன்.