அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி நிலை முகவர்கள் (பி.எல்.ஓ-2) மூலம் கடிதங்கள் பெற்றால் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக கடிதங்கள் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மனு அளித்துள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், வாக்குச் சாவடி நிலை அலுவலர்களால் (பி.எல்.ஓ) வீடு வீடாகச் சென்று படிவங்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி நிலை முகவர்கள் (பி.எல்.ஓ-2) மூலமாக அதிகபட்சம் 50 படிவங்கள் பெற்றுவந்து
வழங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி நிலை முகவர்கள் (பி.எல்.ஓ-2) மூலமாகப் பெற்றால், முறைகேடுகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனையின் பேரில் முன்னாள் அமைச்சர்கள் பா.பென்ஜமின், மாதவரம் மூர்த்தி, பி.வி. ரமணா, மாவட்ட செயலாளர்கள் பொன்னேரி பலராமன், அம்பத்தூர் அலெக்ஸாண்டர் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் பிரதாப்பிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
வீடு வீடாகச் சென்று வழங்கப்படும் வாக்காளர் விபரங்கள் குறித்த பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள், சம்மந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலர்களால் மட்டுமே பெறப்பட வேண்டும் என்றும் பிற கட்சிகளைச் சேர்ந்த வாக்குச் சாவடி நிலை முகவர்கள் (பி.எல்.ஓ-2) அதிகளவில் மனுக்கள் வழங்கும் போது, அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களின் மனுக்களை மட்டும் அனுப்பிவிட்டு மற்றவற்றை அனுப்பாமல் இருக்கவும் வாய்ப்பு இருப்பதால் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் பென்ஜமின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி செயலாளர் பி.வி.பாலாஜி உட்பட ஒன்றிய, நகர, பெருர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பேட்டி : திரு.பென்ஜமின் – முன்னாள் அமைச்சர்