கரூர் செய்தியாளர் மரியான் பாபு
பாமக மாவட்ட செயலாளர் வீடு முற்றுகை..
கரூரில் அன்புமணி ஆதரவு பாமக மாவட்ட செயலாளர் வீடு முன்பு வன்னியர் மக்கள் கட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..
கரூர் அருகே மதுரை பைபாஸ் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் (அன்புமணி ஆதரவு) கிழக்கு மாவட்ட செயலாளர் பிரேம்நாத் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக வன்னியர் மக்கள் கட்சியின் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் திடீர், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்கள் பெண்கள் என 100 பேர் அந்த பகுதியை சூழ்ந்து கொண்டு பாமக மாவட்ட செயலாளர் பிரேம்நாத்துக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர். தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த கரூர் நகர காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினர். அதனையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த வன்னியர் மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் சத்தியமூர்த்தி,கடந்த 2 நாட்களுக்கு முன்பாக பாமக மாவட்ட செயலாளர் பிரேம்நாத் வன்னியர் சமூக மக்களையும், காவிரி கரையோர மாட்டுவண்டி தொழிலாளர்களையும் கேவலமாக பேசியிருக்கிறார். மணல் திருடர்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவரது வீடு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பிரேம்நாத் இவ்வாறு பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். பொது வெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், நான் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைக்கூலி என்று விமர்சனம் செய்துள்ளார்.நான் செந்தில் பாலாஜியை சந்தித்து ஒரு வருடத்திற்கு மேல் இருக்கும்.எந்த சிபாரிசிக்கும், பொருளாதார உதவிக்கும் இதுவரை நான் அவரை சந்தித்ததில்லை. மதுவை ஒழிப்போம், புகையிலையை ஒழிப்போம் என்று சொல்லி வரும் அன்புமணி கட்சியில் இருக்கும் மாவட்ட செயலாளர் பிரேம்நாத் ஒரு முழுநேர குடிகாரர். மது போதை அதிகமாகி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர். அப்படிப்பட்டவரை அன்புமணி கட்சி பொறுப்பில் வைத்திருப்பது எப்படி என்று எங்களுக்கு தெரியவில்லை. பிரேம்நாத் தொடர்ந்து இதே போல் எங்களுக்கு எதிராக செயல்பட்டால், சென்னை பனையூரில் உள்ள அன்புமணி அலுவலகத்திற்கு நேரடியாக சென்று பிரேம்நாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மனு கொடுக்க வேண்டி இருக்கும் என்று தெரிவித்தார்.