கோவை கேஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 17-வது பட்டமளிப்பு விழா: 1339 மாணவர்கள் பட்டம் பெற்றனர்
கோவை சரவணம்பட்டியில் உள்ள கேஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 17-வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் முனைவர் அசோக் பக்தவத்சலம் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமை உரையில், ஒவ்வொரு மாணவரின் கடின உழைப்பும், பெற்றோர்கள் கேஜி கல்வி நிறுவனத்தின் மீது வைத்த நம்பிக்கையுமே இந்த வெற்றியை வழங்கியுள்ளது என்று கூறி மாணவர்களை வாழ்த்தினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் வித்யா ஆண்டறிக்கையை வாசித்து, கல்லூரியின் சாதனைகளை எடுத்துரைத்தார்.
சிறப்பு விருந்தினராக சென்னை, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் (TNSCST) உறுப்பினர் செயலர் பேராசிரியர் முனைவர் S. வின்சென்ட் கலந்து கொண்டு 1339 மாணவ மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கிப் பாராட்டினார்.
அவர் தனது உரையில், “கல்வியின் மூலம் பெற்றுக்கொண்ட அறிவாண்மையை எதிர்கால வாழ்க்கை சிறக்கப் பயன்படுத்த வேண்டும். கலை மற்றும் அறிவியல் துறையில் சாதித்தவர்களே உலகளவில் சிறந்த சாதனையாளர்களாகத் திகழ்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
இவ்விழாவில் 16-க்கும் மேற்பட்ட துறைகளைச் சார்ந்த 1116 இளங்கலை மாணவர்கள், 102 முதுகலை மாணவர்கள், 121 முதுகலை கணினி பயன்பாட்டியல் (MCA) மாணவர்கள் மற்றும் 2 முனைவர் பட்ட ஆய்வாளர்கள் என மொத்தம் 1339 பேருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.
பாரதியார் பல்கலைக்கழக தரவரிசையில் இக்கல்லூரியைச் சேர்ந்த 32 மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் S. கன்யா (M.Sc SS), S. காயத்திரி (B.Sc CT), T. கீர்த்திகா (B.Sc ECS) ஆகிய மூன்று மாணவிகள் தங்கப்பதக்கங்களைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
இளம் பட்டதாரிகள் அனைவரும் சமூகப் பொறுப்புணர்வோடும், உறுதியுடனும் செயல்படுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கல்லூரியின் செயலர் முனைவர் பா. வனிதா, தேர்வு கட்டுப்பாட்டுத்துறை நிர்வாக இயக்குநர் முனைவர் D. கவிதா மற்றும் குழுவினர் விழாவை ஒருங்கிணைத்தனர்.
கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. அரவிந்த் குமார் ராஜேந்திரன், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.