தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் கிணற்றில் விழுந்த பெண் தொழிலாளியை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்த ஆடு மேய்க்கும் பெண் தொழிலாளியை, தீயணைப்பு துறையினர் வீரத்துடன் உயிருடன் மீட்டனர்.
தாராபுரம் எல்லிஸ் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம், அவரின் மனைவி சரஸ்வதி (வயது 45) ஆடு மேய்க்கும் கூலி தொழிலாளி ஆவார். தினமும் போலவே நேற்று மதியம் அவர் எல்லிஸ் நகர் பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அந்த இடத்தில் சுமார் 40 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று இருந்தது. அதில் சுமார் 5 அடி அளவிற்கு மட்டுமே தண்ணீர் இருந்தது.
அந்த சமயம், கிணறு அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சரஸ்வதி, திடீரென கால் தவறி கிணற்றுக்குள் விழுந்தார். உடனே அவர் கிணற்றில் உள்ள பாறை கற்களைப் பிடித்துக் கொண்டு “என்னை காப்பாற்றுங்கள், என்னை காப்பாற்றுங்கள்” என சத்தமிட்டார். பல மணி நேரம் அவர் உதவி கோரி கூவியபோது, அந்த வழியாகச் சென்ற ஒருவர் கிணற்றிலிருந்து சத்தம் கேட்க, எட்டிப் பார்த்தபோது ஒரு பெண் உள்ளே தத்தளித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
அவர் உடனடியாக தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில், பத்து பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் குழு வாகனத்துடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அங்கு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சரஸ்வதியை கயிறு கட்டி, வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கினர். பின்னர் சரஸ்வதியின் உடலில் பாதுகாப்பாக வளையம் போல கயிற்றை சுற்றி, மெதுவாக மேலே தூக்கி, கிணற்றிலிருந்து உயிருடன் மீட்டனர்.
மீட்கப்பட்ட சரஸ்வதி சற்று சோர்வடைந்திருந்ததால், தீயணைப்பு வீரர்கள் தாராபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு, சரஸ்வதியை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
ஆடு மேய்க்கும் பெண் தொழிலாளி உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிணற்றுக்குள் இறங்கி சரஸ்வதியை மீட்ட தீயணைப்பு வீரர்களின் வீரதீரச் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டுகள் மழைபோல் தெரிவித்தனர்.