வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
திண்டுக்கல் மாநகராட்சி மன்ற கூட்டம் 75 நாட்களாகியும் நடைபெறாததை கண்டித்து பாஜக மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கையில் பதாகையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற கூட்டம் ஒவ்வொரு மாதமும் மக்களின் பிரச்சனைகள் மற்றும் வார்டு பகுதிகளில் உள்ள குறைகளை மாமன்ற உறுப்பினர்கள் மூலம் குறைகளைக் கேட்டறிந்து அதற்கு தீர்வு காணும் வகையில் மாநகராட்சி செயல்படும். இந்நிலையில் தற்போது செப்டம்பர்-1ம் தேதி நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு, தற்போது 75 நாட்களாகியும் திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடக்கவில்லை. மேலும் மாவட்ட ஆட்சியர், தமிழக முதல்வர் உள்ளிட்டவருக்கு மனு அளித்தும் இதுவரை இதற்கு எந்த ஒரு தீர்வும் இல்லாததை கண்டித்தும், திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் 14-வது வார்டு பாஜக மாமன்ற உறுப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தர்ணா போராட்டத்தை தொடர்ந்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர்(பொறுப்பு) மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் செல்போனில் தொடர்பு கொண்டு வரும் 24-ம் தேதி மாமன்ற கூட்டம் நடைபெறும் என்று கூறியதை தொடர்ந்து மாமன்ற உறுப்பினர் தனபாலன் தர்ணா போராட்டத்தை கைவிட்டார்.
24-ம் தேதி மாமன்ற கூட்டம் நடைபெறவில்லை என்றால் 25-ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக மாமன்ற உறுப்பினர் தனபாலன் தெரிவித்தார்.