ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்
தருமபுரி, ஆக. 24 பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில்களுக்கு நிறுத்தம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நல சங்கம் சார்பில் தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில், தருமபுரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் சி. சரவணன் அவர்களும் பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில் நிறுத்தங்கள் பெற்றுத்தர உறுதியளித்துள்ளார்.
தற்போதும், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய அமைச்சர்கள் எல். முருகன், வி. சோமண்ணா மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கு சி. சரவணன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில், தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சியையும், குறிப்பாக பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் தருமபுரி வட்டங்களில் உள்ள கிராமப்புற மக்களின் போக்குவரத்து தேவைகளையும் கருத்தில் கொண்டு, பொம்மிடி ரயில் நிலையத்தில் கோவை எக்ஸ்பிரஸ், மைசூர் எக்ஸ்பிரஸ் மற்றும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களுக்கு நிறுத்தம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்
மேலும், பொம்மிடி ரயில் நிலையம் நீண்ட காலமாக இப்பகுதி மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்து வரும் முக்கியமான ரயில் நிலையமாக இருப்பதையும், இங்கு கூடுதல் ரயில் நிறுத்தங்கள் கிடைத்தால் பொம்மிடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களின் பொருளாதாரம், மருத்துவம், கல்வி மற்றும் சமூக வளர்ச்சிக்கு பெரும் பயனாக இருக்கும் என்பதையும் அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து பாஜக தருமபுரி மாவட்டத் தலைவர் சி. சரவணன் கூறுகையில், “பொம்மிடி பழமை வாய்ந்த ரயில் நிலையமாகும். பொம்மிடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இங்கு கூடுதல் ரயில் நிறுத்தங்கள் வழங்கப்பட வேண்டும். கோவை, மைசூர் மற்றும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு நிறுத்தம் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வோம். பொம்மிடிக்கு கூடுதல் ரயில் வசதிகளை பெற்றுத்தர பாரதிய ஜனதா கட்சி உறுதுணையாக நிற்கும்” என்றார்.
பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில் நிறுத்தங்கள் வழங்கப்பட்டால் தருமபுரி மாவட்டத்தின் கிராமப்புற மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கான பயண வசதி மேம்படும் என பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நல சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.