நாகப்பட்டினம்,செப்.7-
அடையாளம் தெரியாத வாகனம் மோதி சேதமடைந்த மின்கம்பம் சீரமைக்கப்படுமா? என பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சேதமடைந்த மின்கம்பம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி பகுதிகளுக்கு சாலை ஓரமாக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடுக்கடை பேருந்து நிறுத்தம் எதிரில் உள்ள மின்கம்பத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மின்கம்பத்தின் அடிப்பகுதி முழுவதும் முறிந்து உள்ளது. இது எந்நேரமும் சாய்ந்து விழுந்து விபத்துக்களை ஏற்படுத்தும் ஆபத்தான நிலையில் இருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனே இருந்து வருகின்றனர்.
மேலும் காற்று வேகமாக வீசும் நேரங்களில் மின்கம்பம் அசைவதால் அருகில் உள்ள பொதுமக்கள் வியாபாரிகள் பயத்தில் உள்ளனர். இந்த மின்கம்பம் நாகப்பட்டினம் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதால் மின்கம்பம் சாய்ந்து விழுந்தால் உயிரிழப்புகள் மற்றும் பெரிய அளவில் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
நடவடிக்கை
இது குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு எந்நேரமும் சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.