நவீன மருத்துவம், ஆயுர்வேதம் மற்றும் யோகா ஆகிய மூன்று மருத்துவ அணுகுமுறைகளையும் ஒருங்கிணைத்து நோயாளிகளுக்கு முழுமையான சிகிச்சை வழங்கும் வகையில், பி.எஸ்.ஜி. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் ஆர்ய வைத்திய பார்மசி நிறுவனம் இணைந்து கோவையில் ஒருங்கிணைந்த மருத்துவ மையத்தை தொடங்கியுள்ளன.
பி.எஸ்.ஜி. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் ‘ஏ’ கட்டிடத்தின் 4-வது தளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தின் தொடக்க நிகழ்ச்சி, பி.எஸ்.ஜி. நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆர்ய வைத்திய பார்மசி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி. தேவிதாஸ் வாரியர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
மருத்துவமனை இயக்குநர் டாக்டர் புவனேஸ்வரன், மருத்துவக் கல்லூரி முதல்வர் சுப்பாராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் ஆர்ய வைத்திய பார்மசி நிர்வாகத்தினர் இணைந்து கூறுகையில்,
நோய்க்கான அறிகுறிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிப்பதைவிட, நோயாளியின் உடல் மற்றும் மனநிலை, வாழ்க்கைமுறை ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு முழுமையான சுகாதாரப் பராமரிப்பு வழங்குவதே இந்த மையத்தின் நோக்கமாகும்.
நோயாளிகளின் தேவைக்கேற்ப நவீன மருத்துவர்கள், ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் யோகா நிபுணர்கள் இணைந்து நோயாளியின் உடல்நிலையை மதிப்பீடு செய்து, அவர்களுக்கு ஏற்ற சிகிச்சை முறையைத் தீர்மானிப்பார்கள். இதன் மூலம் பல்வேறு மருத்துவ முறைகளின் சிறப்பம்சங்களை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கப்படும்.
மூட்டுவலி, மூட்டு தொடர்பான பிரச்சினைகள், வாழ்க்கைமுறை சார்ந்த நோய்கள், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் நோய் தடுப்பு சுகாதாரப் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு இங்கு ஒருங்கிணைந்த மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும். தேவைக்கேற்ப பஞ்சகர்மா சிகிச்சை முறைகளும் வழங்கப்படும்.
பி.எஸ்.ஜி. மருத்துவமனை கடந்த 2007-ம் ஆண்டிலேயே யோகாவை சிகிச்சை முறையாக அறிமுகப்படுத்தியதாகவும், கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக நோயாளிகளின் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பராமரிப்பில் யோகாவை பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், பி.எஸ்.ஜி. மருத்துவமனை மற்றும் ஆர்ய வைத்திய பார்மசி இணைந்து முடக்கு வாதம் தொடர்பாக மருத்துவ ஆய்வு மேற்கொண்டதாகவும், நவீன முடக்கு வாத சிகிச்சையுடன் ஆயுர்வேதம் மற்றும் யோகா சார்ந்த சிகிச்சை முறைகளையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் ஊக்கமளிக்கும் முடிவுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
நவீன மருத்துவத்துடன் ஆயுஷ் மருத்துவ முறைகளை ஒருங்கிணைப்பது தொடர்பான தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப இந்த ஒருங்கிணைந்த மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.