மகாத்மா காந்தியடிகளின் 158-வது பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், செட்டிகுளம் ஊராட்சியில் சிறப்பு காந்தி ஜெயந்தி தின கிராம சபை கூட்டம், மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக, தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் திரு உருவப் படத்திற்கு மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மற்றும் அதிகாரிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, வேளாண்மைத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை, மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் சுய உதவிக் குழுக்களின் சார்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் “தூய்மையே சேவை”, சுகாதாரம் மற்றும் தொழுநோய் விழிப்புணர்வு ஆகிய உறுதிமொழி களை ஏற்றுக் கொண்டனர்.
இக்கூட்டத்தில் செட்டிகுளம் ஊராட்சியின் வளர்ச்சிப் பணிகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட முக்கியப் பொருள்கள் குறித்து கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களின் முன்னிலையில் விரிவாக விவாதிக்கப்
பட்டது.
பின்னர், ஊராட்சியைத் தூய்மையாகப் பராமரிக்கவும், தடையற்ற குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யவும் களத்தில் நின்று அர்ப்பணிப்புடன் உழைக்கும் தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குநர்களை பாராட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, சால்வை அணிவித்து, பரிசுப் பொருள்கள் வழங்கி கௌரவித்தார்.
தொடர்ந்து, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் இரண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்திற் கான சமுதாய முதலீட்டு நிதிக்கான காசோலைகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு அடிப்படைத் தேவைகள் குறித்த கோரிக்கை மனுக்களையும் நேரில் பெற்றுக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சதீஷ்பாபு, உதவி இயக்குநர் (ஊராட்சிகள் மற்றும் தணிக்கை – வடக்கு) விசாலாட்சி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்வேறு துறை அரசு அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து
கொண்டனர்.