பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்

அரியலூரில் போக்குவரத்துறை அமைச்சர் தமிழ்நாட்டில் மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தில் இதுவரை சுமார் 268 கோடி பயணங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார்.

அரியலூர் தனியார் மண்டபத்தில தமிழக அரசின் இரண்டு ஆண்டு நிறைவினை முன்னிட்டு அரசின் சாதனை விளக்கக் கையேட்டினை வெளியிட்டு பின்னர் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று ஈராண்டு நிறைவு பெற்றதையொட்டி அரியலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த விவரங்கள் அடங்கிய கையேடு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயார் செய்யப்பட்டு இன்றைய தினம் அரியலூரில் இக்கையேடு வெளியிடப்பட்டுள்ளது.

இக்கையேடு ஈடில்லா ஆட்சி – ஈராண்டே சாட்சி என்ற தலைப்பில் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த விவரங்கள் முழு தகவல்களுடன் இதில் இடம் பெற்றுள்ளது.

மேலும், இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, மாவட்ட வழங்கல் அலுவலகம், பொது சுகாதாரம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், சமூக நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை என பல்வேறு துறைகளின் சார்பில் 1,034 பயனாளிகளுக்கு ரூ.4,81,95,195 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி மகளிர் நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்யலாம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 268 கோடி பயணங்கள் மகளிரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே போன்று தினசரி சராசரியாக 40 இலட்சம் பெண்கள் இலவச பேருந்துப் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏழை, எளிய மகளிருக்கு இத்திட்டம் மிகுந்த பயனை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மகளிர் பயணத்திற்கான செலவுத் தொகையினை ஒவ்வொரு ஆண்டும் மானியமாக அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி வருகிறார்கள். இது குறித்து டெல்லியில் நடைபெற்ற போக்குவரத்துத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் பிற அமைச்சர்கள் இலவச பேருந்து பயண திட்டம் குறித்தும், இத்திட்டத்திற்கு ஆகும் செலவினம் குறித்தும் கேட்டறிந்து அரசு வழங்கும் மானிய தொகை குறித்து தகவலை கேட்டு ஆச்சர்யப்பட்டனர்.

தமிழகத்தை பின்பற்றி தற்போது கர்நாடக மாநிலத்தில் மகளிர் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற திட்டத்தை அறிவித்துள்ளார்கள்.

பெண்கள் கல்வியில் முன்னேற இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன் முறையாக புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரியில் மேற்படிப்பு பயிலும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதே போன்று வருகின்ற செப்டம்பர் 15 அன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கக் கூடிய மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தினை

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைக்க உள்ளார்கள். இத்திட்டத்தால் பெண்கள் மிகுந்த பயன்பெறுவார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்திடாத இதுபோன்ற முன் மாதிரியான மக்கள் நலத்திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகிறார்கள். எனவே, தமிழக அரசின் இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்களை பயனாளிகள் உரிய முறையில் பெற்று பயன் பெறுவதுடன் தமிழக அரசுக்கு என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்(பொ) எஸ்.முருகண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன் , பரிமளம் மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) குமார், அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *