சட்டம் ஒழுங்கு, கள்ளச்சாராயம் விற்பனையை தடுப்பது தொடர்பாக 3 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். விழுப்புரம், சட்டம் ஒழுங்கு, கள்ளச்சாராயம் விற்பனையை தடுப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் விழுப்புரம், கடலூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்கள் மற்றும் 4 மாவட்ட எஸ்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர். முன்னதாக கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நேரில் ஆதரவு தெரிவிப்பதற்காக விழுப்புரம் மாவட்டத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்றார். கள்ளச் சாராயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆறுதல் கூறினார். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே சந்தித்து முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கேட்டறிந்தார். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “கள்ளச் சாராயத்தில் மெத்தனாலை பயன்படுத்தியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளசாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டோருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படும். மரக்காணம் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச் சாராய விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச் சாரய விற்பனையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். இதனிடையே விழுப்புரத்தில் கள்ளச் சாராயம் அருந்தி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச் சாராயம் அருந்தி 5 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *