புதுச்சேரி ஆளுநர் கவர்னர் மாளிகையில் சிக்கிம் மாநில விழா நடந்தது. இதில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:- மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வருத்தம் தரக்கூடிய விஷயம். இது விழுப்புரத்தில் நடந்த ஒரு கரும்புள்ளி என்றே சொல்ல வேண்டும். முதலில் இத்தகைய கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். கள்ளச்சாராயம் உடம்புக்கு எவ்வளவு கேடு என்பதை, தயாரிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உயிர்வாழ்ந்தால்கூட கண்பார்வை போய்விடும். எவ்வளவு உயர்தர சிகிச்சை கொடுத்தாலும் சிலரை காப்பாற்ற முடியாத சூழ்நிலை மனதுக்கு வருத்தமான ஒன்று. எனவே கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த வேண்டும். புதுவையில் போதை பொருட்களாக இருந்தாலும், கள்ளச்சாராயமாக இருந்தாலும் அதை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சென்றது, அங்கிருந்து சென்றது என சொல்லி நமது கடமை, பொறுப்பை தட்டிக்கழிக்கக்கூடாது. கள்ளச்சாராயம் எந்த பகுதியிலிருந்து வந்தாலும், அதை கட்டுப்படுத்த வேண்டும். கள்ளச்சாராயம் புதுவையில் இருந்து வந்தது என்று சொல்லி, சில பொறுப்புகள் எங்களுக்கு இல்லை என எந்த பகுதியை சேர்ந்தவர்களும் சொல்லிவிட முடியாது. இந்த நிகழ்வுக்கு அப்படிப்பட்ட சூழ்நிலை இருந்தாலும், அது கட்டுப்படுத்தப்படும். தவறான வழியில் தயாரிக்கப்படும் இத்தகைய போதை பொருட்கள் புதுவையில் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *