திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரத்தில் உதவியாளர் எழுத்துத் தேர்வு முன்னறிவிப்பின்றி ஒத்திவைப்பு, விண்ணப்பதாரர்கள் ஏமாற்றம்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடத்தப்பட இருந்த உதவியாளர் எழுத்துத் தேர்வுகள், நிர்வாகக் காரணங்களுக்காக திடீரென ஒத்திவைக்கப்பட்டதால், தேர்வு எழுத வந்த பெண்கள் மற்றும் ஆண்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தேர்வு மையமாக இருந்த மகாராணி கலை அறிவியல் கல்லூரி, இன்று காலை முதலே விண்ணப்பதாரர்களால் நிரம்பியிருந்தது. நீண்ட தூரங்களில் இருந்து, காலை 8 மணி அளவில் மையத்தை வந்தடைந்த தேர்வர்கள், எந்தவித முன்னறிவிப்பும் வழங்காமல் தேர்வு ரத்து செய்யப்பட்டதாகவும், இதுகுறித்து மையத்தில் எந்த அறிவிப்பும் ஒட்டப்படாததால் குழப்பம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.

தேர்வு ரத்துக்கான காரணமாக, வயது நிர்ணயம் தொடர்பான அரசின் புதிய அறிவுரைகள் பெறப்பட்டுள்ளதால், தேர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தனியார் கல்லூரி முன்பு, கைக்குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வந்த தாய்மார்கள், தினசரி கூலி தொழில்களில் இருந்து வந்த ஆண்கள், வேலைநேரத்தை இழந்த மாணவர்கள் என பல்வேறு தரப்பின் விண்ணப்பதாரர்கள் பெருமளவில் காத்திருந்தனர். நிர்வாகத்திடம் கேட்டபோது அதிகாரிகள் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மையத்தில் அறிவிப்பு ஒட்டப்படாதது கூடுதலான சிரமத்தை ஏற்படுத்தியதாகவும் கூறினர்.

“நாங்கள் கடந்த ஓராண்டாக இந்த தேர்வுக்காக காத்திருந்தோம். தேர்வு எழுதிப் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்தோம். ஆனால் இவ்வாறு திடீரென அறிவிப்பு ரத்து செய்தது எங்களுக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது,” என தேர்வர்கள் தெரிவித்தனர்.

மேலும், “திமுக அரசு செயல்படுகிறதா இல்லையா என்று நாங்கள் கூட புரியவில்லை. அரசு மெத்தனப்போக்கில் செயல்படுகிறது. எதிர்கால அறிவிப்புகள் குறைந்தது தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்கள் வாயிலாக தெளிவாக வழங்கப்பட வேண்டும்,” என விண்ணப்பதாரர்கள் கோரிக்கை வைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *