நன்னிலம்,
டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழையால் மாவட்டத்தில் விளைநிலங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட ரெட்டக்குடி, உபயவேதாந்தபுரம், கோவில்திருமாளம், செம்பியநல்லூர், மேனாங்குடி, கொல்லாபுரம், கடகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ள இளம் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை அதிமுக மாவட்ட செயலாளரான முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ கூறியதாவது,….
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இளம் நெற்பயிர்கள் 6 நாட்களுக்கு மேலாக மழை நீரில் மூழ்கி இருக்கிறது. பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உடனடியாக ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். ஏற்கனவே நிவாரணம் வழங்கப்படாததால் விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்கள்.
எனவே அதிகாரிகளை கொண்டு கணக்கெடுப்பு செய்து நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும். மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறைவாக இருப்பதாலும், தூர்வார்வதிலும் மிகப்பெரிய குளறுபடிகள் இருப்பதாலும் தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாய்க்கால்களை தூர்வார வில்லை. ஆறுகளில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றவில்லை என்பதே எங்கு பார்த்தாலும் பொதுமக்களிடம் பேச்சாக இருக்கிறது.
தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு உணவு வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் இவ்வாறு முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ தெரிவித்தார். மழை நீரால் பாதிக்கப்பட்டு கொல்லாபுரம் பள்ளிக்கூடத்தில் தங்கி இருந்த பொதுமக்களை இரா.காமராஜ் எம்எல்ஏ சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்வின் போது ஒன்றியச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.