பெரம்பலூர்.டிச.03. மக்களுக்கு வழங்கப்படும் குடும்ப அட்டைகளில் இரண்டு வகையான அட்டைகள் உண்டு. ஒன்று முன்னுரிமையற்ற குடும்ப அட்டை (Non-Priority Household) மற்றொன்று முன்னுரிமைபெற்ற குடும்ப அட்டை (Priority Household).
இதில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் நாரணமங்கலத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர், இரண்டு காதுகளும் கேட்காத நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டரை வயதுள்ள தனது குழந்தை யாழினிநாச்சியாருக்கு உரிய நேரத்தில் காக்ளியர் இம்பிளாண்ட் அறுவை சிகிச்சை செய்திட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.


அதே போன்று ஆலத்தூர் வட்டம் சாத்தனூர் குடிகாடு கிராமத்தில் கூலி வேலை செய்துவரும் சுந்தராம்பாள் என்பவர், திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தனது 9 வயது மகளான கார்த்திகாவுக்கு இரண்டு முறை தண்டுவட அறுவை சிகிச்சை செய்து தற்போது மருத்துவர்களின் அறிவுரைப்படி மூன்றாவது அறுவை சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார்.

இந்த அறுவை சிகிச்சைகளை அரசு நிதி உதவியில் செய்வதற்கு அவர்கள் முன்னுரிமைபெற்ற குடும்ப அட்டை (Priority Household) பெற்றவராக இருக்க வேண்டும் என்பது விதியாகும். எனவே, வறுமையான சூழலில் அதிகம் செலவு செய்து தங்கள் குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்ய இயலாது என, இந்த இரண்டு குழந்தைகளின் பெற்றோர்களும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் தங்கள் குழந்தைகளின் நிலையை எடுத்துக்கூறி தங்களுடைய குடும்ப அட்டையினை முன்னுரிமையற்ற அட்டையிலிருந்து, முன்னுரிமை அட்டையாக மாற்ற உதவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

முன்னுரிமையற்ற அட்டையினை முன்னுரிமை குடும்ப அட்டையாக மாற்றுவது என்பது, நீண்ட நெடிய படிநிலைகளுடனான நடவடிக்கைகளுக்கு உட்பட்டதாகும்.

இதுபோன்ற விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பதாரரின் கோரிக்கை உண்மையானதா, அரசின் முன்னுரிமை குடும்ப அட்டை பெறும் அளவிற்கு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவரா என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்து அதன்பின்னர் அரசிற்கு பரிந்துரைத்த பின்னரே இந்த அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவையெல்லாம் முடிந்து அட்டை வழங்க குறைந்தது இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகும்.

ஆனால், இந்த இரண்டு குழந்தைகளின் உடல் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்திட வேண்டும் என்ற அவசர காரணம் கருதி, மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி மேற்கொண்ட தொடர் நடவடிக்கையால் விண்ணப்பித்து ஒரு வார காலத்திற்குள் இரண்டு குழந்தைகளின் குடும்பத்திற்கும் முன்னுரிமை குடும்ப அட்டைகளை பெற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அவர்களை வரவழைத்து வழங்கினார்.

குடும்ப அட்டைகளை பெற்றுக்கொண்ட குழந்தைகளின் பெற்றோர் “தங்கள் குழந்தைகளுக்கு அடுத்தவாரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் நாள் குறித்துள்ள நிலையில், இந்த குடும்ப அட்டை கிடைக்காமல் போயிருந்தால் எங்கள் குழந்தைகளின் நிலை என்னவாகியிருக்கும் என நினைத்துக் கூட பார்க்க இயலவில்லை. தங்கள் குடும்பத்தில் உள்ள ஒரு குழந்தைக்கு இந்த நிலை ஏற்பட்டால் எப்படி நடவடிக்கை எடுப்பார்களோ அப்படி நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். இது எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாது.

எங்கள் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற உதவிய உங்களுக்கு நன்றிதெரிவிக்கின்றோம்” என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
அப்போது, அவர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், இது சாத்தியமானதற்கு நான் மட்டும் காரணமல்ல, மாவட்ட வழங்கல் அலுவலர், வட்ட வழங்கல் அலுவலர் என அனைவரின் கூட்டு முயற்சியால் சாத்தியமாயிற்று. கோரிக்கை வைப்போரின் நிலை அறிந்து, அவசரத்தை உணர்ந்து நடவடிக்கை எடுப்பது எங்கள் கடமை. குழந்தைகளுக்கு விரைவில் அறுவை சிகிச்சைகள் முடிந்த அவர்கள் நல்ல நலம் பெற்று வர வாழ்த்துகின்றேன் என தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், ஆலத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் சசிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *